மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

திரிபுராவில் மீண்டும் பத்திரிகையாளர் கொலை!

திரிபுராவில் மீண்டும் பத்திரிகையாளர் கொலை!

திரிபுராவில் பத்திரிகையாளரை போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போத்ஜங் நகர எல்லைக்குட்பட்ட ஆர்.கே.நகர் பகுதியில் வென்கார்ட் (Venguard) என்னும் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் மற்றும் ‘சியான்டன் பத்ரிகா’ என்னும் பெங்காலி பத்திரிகையின் நிருபராக சுதிப் தத்தா பவுமிக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் திரிபுரா மாநில ரைஃபிள்ஸ் இரண்டாவது தளபதியை சந்திப்பதற்காக நேற்று (நவம்பர் 21) சென்றுள்ளார். அப்போது, அவரது அலுவலகத்துக்கு வெளியே இருந்த மாநில ரைஃபிள்ஸ் போலீஸ் படையைச் சேர்ந்த நந்து ரியாங்குக்கும் நிருபர் சுதிப் தத்தாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நந்து ரியாங் தனது துப்பாக்கியால் நிருபர் சுதிப் தத்தாவை சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுதிப் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அகர்தலாவில் உள்ள கோபிந்த பல்லவ் பந்த் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் நந்து ரியாங்கைக் கைது செய்தனர்.

செப்டம்பர் 21ஆம் தேதி திரிபுரா ’தீன் ராத்’ தொலைக்காட்சியின் இளம் பத்திரிகையாளர் சாந்தனு பவுமிக் திரிபுராவில் பழங்குடியினர் கலவரம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon