மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

எஸ் துர்காவுக்குக் கிடைத்த நீதி!

எஸ் துர்காவுக்குக் கிடைத்த நீதி!

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் எஸ் துர்கா திரைப்படத்தைத் திரையிட வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவா தலைநகர் பனாஜியில் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் சார்பில் 48ஆவது சர்வதேசத் திரைப்பட விழா தொடங்கியுள்ளது. இதில் இந்திய மற்றும் சர்வதேசத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் என சுமார் 200 படங்கள் திரையிடப்பட உள்ளது.

இவ்விழாவில் திரையிடப்படுவதற்கான இந்தியத் திரைப்படங்கள் மற்றும் விருதுக்குரிய திரைப்படங்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நடுவர் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துக்குக் கடந்த செப்டம்பர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த எஸ் துர்கா என்ற மலையாளப் படத்தையும், நியூட் என்ற மராத்தி படத்தையும் நீக்கம் செய்து புதிய பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் இந்த செயல்பாடு, தேர்வுக்குழு தலைவர் மற்றும் நடுவர்களில் சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து பாலிவுட் இயக்குநர் சுஜோய் கோஷ் விலகினார். அவரைத் தொடர்ந்து மேலும் இரு உறுப்பினர்களும் பதவி விலகியதால் திரைப்பட விழா பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதனையடுத்து, எஸ் துர்கா படத்தை தேர்வு பட்டியலில் இருந்து நீக்கியது தொடர்பாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் எடுத்த முடிவை எதிர்த்து படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இந்திய திரைப்படங்கள் பட்டியலில் எஸ் துர்கா திரைப்படத்தையும் சேர்த்து திரையிட வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து இயக்குநர் சனல் குமார், “எங்களுடன் மக்கள் துணை நின்றார்கள். அவர்கள் எங்கள்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதற்கான நல்ல கூலி தற்போது கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. ஜனநாயகத்தை யாரும் கொன்றுவிட முடியாது. சட்டம் என்பது மக்களுக்கானதுதான் என்பதை இந்தத் தீர்ப்பு நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon