மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

சிறப்புப் பார்வை: நெல்லையில் டெங்கு அபாயம்!

சிறப்புப் பார்வை: நெல்லையில் டெங்கு அபாயம்!

ர. ரஞ்சிதா

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்து மக்கள் பீதியடைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குழந்தைகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என உயிரிழந்துள்ளனர். இதனால், பொதுமக்களிடம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த நங்கமுத்து என்பவரது மகன் மாயாண்டி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்துவந்த அந்தச் சிறுவன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் (நவம்பர் 20) பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆலங்குளம் மங்கம்மாள் சாலையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான அறிஞர்துரை என்பவரின் மகள் காயத்ரி, கடந்த சில தினங்களாகக் காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பெற்றுவந்தார். பட்டதாரியான அவர் ஆலங்குளத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி காயத்ரி உயிரிழந்தார்.

இந்த இரு சம்பவங்களும் நெல்லை மாவட்டத்தின் நிலைமையை உணர்த்தும் சான்றுகள். இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக குறிப்பன்குளம் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவன் முத்துவேல்ராஜன், வடக்கு காவலாகுறிச்சி கிராமத்தின் 19 வயது பெண் கற்பகவள்ளி, ஆலங்குளம் நந்தவனத் தெருவைச் சேர்ந்த 5ஆம் வகுப்பு மாணவன் மகேந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். ஆலங்குளத்தைச் சேர்ந்த சி.ஏ பட்டதாரியான மரிய ரோஸ்லின் என்பவரும் கடந்த மாதம் மர்மக் காய்ச்சலுக்குப் பலியானார். குருவன்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கீர்த்திகா என்ற சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மரணங்களால் நெல்லை டெங்கு பீதியில் உறைந்துள்ளது.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள்

டெங்கு பாதிப்பு நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீவிரமாக இருந்தது. இந்த வருடம் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. கூடுதலாக சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் வீடுகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் மட்டும் அல்லாமல் வீதிகள், பொது இடங்களில் தேங்கும் நீர் உள்ள இடங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகாதபடி மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இவற்றால் டெங்குவின் தாக்கம் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், முற்றிலுமாக அகற்ற முடியவில்லை. மாவட்டம் முழுவதும் இந்தக் காய்ச்சலின் தாக்கம் பரவலாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்தபடியே இருக்கிறது. கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏற்பட்ட மரணங்கள் இதன் அபாயத்தை உணர்த்துகின்றன.

டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த வாரத்தில் பள்ளிச் சிறுவர்கள் உயிர் இழந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் டெங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது. காய்ச்சல் வந்துவிட்டாலே மக்கள் அலறியடித்து மருத்துவமனைக்குச் செல்லும் நிலைமை உள்ளது.

ஆட்சியாளரின் ஆய்வு

இம்மாவட்டத்தில் தீவிரம் அடைந்துவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த 10 நாள்களில் டெங்கு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெங்கு நோயை உருவாக்கும் ஏடிஸ் வகைக் கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்களில் சுற்றுச்சூழல் இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொசு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் இதுவரை 200-க்கும் அதிகமான கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கட்டடங்களில் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டைப் பகுதியில் நடைபெற்று வரக்கூடிய டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வுசெய்தார்.

அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் மெகா துப்புரவுப் பணிகளை ஆய்வுசெய்த அவர், வீடு விடாகச் சென்று குடிநீர்த் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவை சுத்தமாகப் பராமரிக்கப்படுகின்றனவா என ஆய்வு செய்தார். டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களைத் தீவிரமாகப் பணியாற்றவும் உத்தரவிட்டார். புதிதாகக் கட்டப்பட்டுவரும் கட்டடங்களில் கொசு புழுக்கள் உற்பதியாகிறதா என்பதையும் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் டெங்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “நெல்லை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் அலுவலர்கள் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் இந்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணியில் 2,000 பணியாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். டெங்கு நோயைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமடைந்திருப்பதால், அடுத்த 10 நாள்களில் நெல்லை மாவட்டத்தில் டெங்கு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிடும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

வழக்கறிஞர் வெளிக்கொணர்ந்த தகவல்கள்

டெங்கு குறித்துக் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக சமூக ஆர்வலரான வழக்கறிஞர் பிரம்மா எழுப்பிய கேள்விகளுக்கு அரசு மருத்துவமனை பதில் அளித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ஜனவரி 1 முதல் மே 4 வரையிலான காலகட்டத்தில், 1004 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 547 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, டெங்கு நோய்குறித்து உரிய தகவல்களை சுகாதாரத் துறை தெரிவிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்ற 15 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரம்மா: “பொதுவாக மழைக்காலத்தில் மட்டுமே டெங்கு நோயின் தாக்குதல் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுவும், கடலோரப் பகுதியிலிருந்தே உள் மாவட்டங்களுக்குப் பரவுமாம். ஆனால், இந்த வருடம், நெல்லை மாவட்டத்தில் மழைக்கு முன்பாகவே டெங்கு பரவத் தொடங்கிவிட்டது. அதனால்தான், எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் எனத் தகவல் கேட்டேன். அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் நிறைய பேர் சிகிச்சை பெற்றார்கள். அதில் பலன் அளிக்காமல் உயிரிழந்தவர்களும் பலர். ஆனால், அவர்கள் குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை. உயிரிழப்புகள் குறித்தும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் தகவலை மறைப்பதை விட்டுவிட்டு நோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதே அவசியமானது” என்று கூறியுள்ளார்.

சுகாதாரத் துறையின் முயற்சிகள்

சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அன்று (18-11-17) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், “தமிழகத்தில் பருவமழை தொடரும் நிலையில் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறை மூலம் தமிழகம் முழுவதும் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். தமிழகத்தில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அக்டோபர் மாதம் வரை டெங்கு காய்ச்சலால் 17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 52 பேர் உயிரிழந்தனர். டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் மொத்தம் 80 பேர் பலியாகி உள்ளனர். 18 ஆயிரமாக மக்கள் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் 11 ஆயிரமாகக் குறைந்துள்ளது” என்று கூறினார்.

காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் செயல்படும், தனியார் மட்டுமின்றி, அரசு நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். ‘டெங்கு’வைக் கட்டுப்படுத்துவதுடன், ஏடிஸ் வகை கொசுக்களை அழிப்பதே எனது லட்சியம் என்று பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கூறினார்.

“நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய் வேகமாகப் பரவிவருவதால், பொதுமக்களாகிய நாங்கள் அச்சம் அடைந்துள்ளோம். டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இந்த நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதனால் எப்போதும் அரசு மருத்துவ மருத்துவமனையில் 100-க்கும் அதிகமான டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்காகத் தனி வார்டு செயல்பட்டு வருகிறது. டெங்குவை ஒழிக்க முயற்சி செய்து வருகிறது. அதில் தீவிரம் காட்டி டெங்குவை ஒழித்து மக்களை காக்க வேண்டும்” என்கிறார் நெல்லையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ராஜா மணி.

ஒரு மாதத்துக்கு முன்புவரை டெங்கு பற்றிய செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டன. ஆனால், மெர்சல், மழை, ரெய்டு எனப் பல பரபரப்பான செய்திகள் அடுத்தடுத்து டெங்குவின் இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டன. இதனால் டெங்குவைப் பற்றிய பேச்சு பொது வெளியில் குறைந்திருக்கிறது. ஆனால், அதன் வீரியம் இன்னமும் குறையவில்லை என்பதையே நெல்லையின் நிலவரம் காட்டுகிறது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon