மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

விமானத்தில் பறந்த 9.54 கோடிப் பேர்!

விமானத்தில் பறந்த 9.54 கோடிப் பேர்!

இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் சுமார் 9.54 கோடிப் பேர் இந்திய விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.

இதுபற்றி இந்திய சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ’2016ஆம் ஆண்டின் ஜனவரி - அக்டோபர் மாதங்களில் 8.13 கோடிப் பேர் இந்திய விமானங்களில் பயணித்திருந்த நிலையில், இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 17.30 சதவிகித உயர்வுடன் 9.54 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். மேலும், அக்டோபர் மாதத்தில் மட்டும், விமானப் பயணங்களில் தாமதம் உள்ளிட்ட விமானப் பயணம் தொடர்பான குறைகளுக்கு சுமார் 656 பயணிகள் புகாரளித்துள்ளனர். சரியான நேரத்தில் சேவை வழங்கிய விமான நிறுவனமாக 83.9 சதவிகிதத்துடன் இண்டிகோ உள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் (83.3%), ஏர் இந்தியா (77.2%), விஸ்தாரா (75.6), கோ-ஏர் (73.1%) ஜெட் ஏர்வேஸ் (64.0%) ஆகிய விமான நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

விமானங்களில் பயணிகளுக்கான பளுக்காரணி அடிப்படையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 93.7 சதவிகித இருக்கைகள் நிரப்பப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து கோ-ஏர் (87.6%), இண்டிகோ (87.3%), ஏர் ஏசியா (83.0%), ஜெ-ஜெட் லைட் (82.1%), ஜெட் ஏர்வேஸ் (80.5%), விஸ்தாரா (80.2%), ஏர் இந்தியா (76.6%) ஜூம் ஏர் (74.4%) மற்றும் ட்ரூ-ஜெட் (65.7%) உள்ளிட்ட நிறுவனங்கள் பயணிகள் பளுக்காரணியில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon