மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

கிச்சன் கீர்த்தனா – இலங்கை ஸ்பெஷல் தூள் சாம்பார்!

கிச்சன் கீர்த்தனா – இலங்கை ஸ்பெஷல் தூள் சாம்பார்!

ஏம்மா உப்பு கொஞ்சம் தூக்கலா இருக்கு. இன்னும் ஒரு கொதி வரணும்னு சொன்னது தப்பாம்மா.. உடனே என்ன சமைக்க விட்டுட்டீங்களே... என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... சாம்பாருக்குனு ஸ்பெஷலா வறுத்து அரைச்ச பொடி, இல்லைனா விழுதுதைச் சேர்க்கறது நல்லது. அப்பத்தான் ரொம்ப நேரம் கொதிக்கவிட வேண்டிய அவசியம் இருக்காது. கடைசியா, கொத்தமல்லி தூவி இறக்கி, அப்படியே மூடி வெச்சுட்டா... வாசனை மூக்கைத் துளைக்கும்னு வெறும் டிப்ஸை மட்டும் கொடுத்துட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு பார்த்தா விட மாட்டேங்குறாங்களே... இலங்கை ஸ்பெஷல் தூள் சாம்பார் ஒண்ணு செய்ய சொல்லிக் கொடுத்துட்டு இப்பதான் கிளம்புறேன். வாங்களேன் நாமும் ‘தூள்’ சாம்பார் வைப்போம்

தேவையானவை:

நறுக்கிய காய்கறிக் கலவை – ஒரு கப் (100 கிராம்), துவரம்பருப்பு (அல்லது) மசூர் பருப்பு – 100 கிராம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு, கீறிய பச்சை மிளகாய் – 2, தேங்காய்ப் பால் – 4 டேபிள்ஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல், நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, நெய், கறிவேப்பிலை – சிறிதளவு தேவைக்கேற்ப.

செய்முறை:

துவரம்பருப்பை மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவிடவும். இன்னொரு பாத்திரத்தில் காய்கறிகளுடன் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, அரைத்த சாம்பார் பொடி, வெந்த பருப்பை சேர்க்கவும். பச்சை வாசனை போனதும். தேங்காய்ப் பால், தட்டிய பூண்டுப்பல் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை, நெயில் தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

சாம்பார் பொடி தயாரிக்கும் முறை:

காய்ந்த சிவப்பு மிளகாய் – 12, தனியா – ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம், சோம்பு – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், விரலி மஞ்சள் – 4, கறிவேப்பிலை – சிறிதளவு (வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்).

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon