மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

டெல்லியில், விவசாயிகள் நாடாளுமன்றம்!

டெல்லியில், விவசாயிகள் நாடாளுமன்றம்!

தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் நாடாளுமன்றத்தில், அகில இந்திய விவசாயிகளின் பிரதிநிதிகள், இந்திய விவசாயிகளின் பிரச்னைகளை விவாதித்து தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகள், டெல்லியில் இரண்டாவது நாளாக, விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். 20ஆம் தேதி காலை 11 மணிக்கு ராம் லீலா மைதானத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நாடாளுமன்றம் நோக்கிச் சென்றவர்களை போலீஸார் தடுத்ததால், ஜந்தர் மந்தர் சாலையில் போராட்டம் நடத்தினர். இரவு நேரமானதும் விவசாய மக்கள், ராம் லீலா மைதானத்திலேயே உறங்கினார்கள், அவர்களுக்குப் பாதுகாப்பாக டெல்லி போலீஸார் நிறுத்தப்பட்டனர். அதில் பெரும்பாலான போலீஸார் விவசாயிகளிடம் நட்பாக பேசி பழகியுள்ளார்கள்.

20ஆம் தேதி போல நேற்றும் ராம் லீலா மைதானத்தில் ஊர்வலம் புறப்பட்டு, ஜந்தர் மந்தர் சாலையை அடைந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற மேடையில் விவசாயிகளின் பிரதிநிதிகள் விவாதத்தைத் தொடங்கினார்கள். நரேந்திர மோடி தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் உள்ள நாடாளுமன்றத்தில், விவசாயிகள் பிரச்னைகளையும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பற்றி விவாதிக்காததால், விவசாயிகள் நாடாளுமன்றம் நடத்தி வருகின்றனர்.

முதலில் நவம்பர் 20ஆம் தேதி பெண்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது, அதில் அகில இந்திய மாதர் சங்கத் தலைவர் சுதா சுந்தரராமன், மேதா பட்கர் போன்ற பெண்கள் பிரதிநிதிகள் மட்டும் நாடாளுமன்றம் போல் விவாதித்தனர்.

தொடர்ந்து நேற்று

(நவம்பர் 21) விவசாயிகள் நாடாளுமன்றம் நடைபெற்றது, கிசான் சங்க அகில இந்திய தலைவர் அசோக் தவாலே, பொதுச் செயலாளர் யோகேந்திர யாதவ், தமிழக பிரதிநிதியாக, கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் போன்றவர்கள் கலந்துகொண்டு விவாதித்தார்கள்.

விவசாயிகள் நாடாளுமன்றத்தை பற்றி கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தமிழகத் தலைவர் ரவீந்திரனிடம் நாம் பேசியபோது, “நாடு முழுவதும், விவசாயிகள் ஐந்து குழுக்களாக பிரிந்து, கடந்த ஒரு மாதமாக, 10 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து, 50 லட்சம் மக்களைச் சந்தித்துள்ளனர். இதில் 29 மாநிலங்களிலிருந்து 184 விவசாய சங்கத்தின் அமைப்புகள் கலந்துகொண்டுள்ளன,

இரண்டு நாள்களாக நடைபெற்ற ஊர்வலம் மற்றும் போராட்டத்தில், லட்சக்கணக்கான விவசாயிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உணர்வுபூர்வமாக, கலந்து கொண்டனர்” என்றார்.

மேலும் , “விவசாய கோரிக்கைகளை நாட்டின் பிரதமரிடம் எடுத்துரைக்க, சந்திக்க நேரம் கேட்டும், ஆட்சியிலுள்ளவர்கள் நாட்டு மக்களுக்குச் சோறுபோடும் விவசாயிகளை அவமதித்து புறக்கணிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டிய அவர், “மோடி தலைமையிலான நாடாளுமன்றத்தில், விவசாயிகள் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்கததால், விவசாயிகள் நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதித்து வருகிறோம். அதில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்” என்று விளக்கினார்.

‘எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்’ என்றவரிடம் நாம் குறுக்கிட்டு, “எம்.எஸ்.சாமிநாதன் குழு என்ன பரிந்துரை செய்துள்ளது?” என்ற கேள்வியை எழுப்பினோம்.

அதற்கு அவர், “விவசாய உற்பத்தி செலவு 50% என்றால், கூடுதலாக 50% சேர்த்து, விவசாய பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரை செய்ததை நிறைவேற்ற முடியாது என்று விவசாயிகள் நண்பன் என்று சொல்லும் மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது.

இரண்டாவது கோரிக்கை, கடன் நிவாரணம் வழங்க வேண்டும், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வங்கிகள், விவசாயக் கடன்களை ரத்து செய்ய முடியாது என்கிறார்கள், தள்ளுபடி இல்லை என்கிறார்கள். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இல்லை என்றால் கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

மழைக்காலக் கூட்டத் தொடர், நவம்பர் 21ஆம் தேதி கூடுவதாக இருந்தது, ஆனால், விவசாயிகள் போராட்டத்தை நவம்பர் 20, 21, 22 ஆகிய மூன்று நாள்களும் அறிவித்திருந்ததால், நாடாளுமன்றக் கூட்டத்தை நாள் குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர். அதனால் விவசாயிகள் நாடாளுமன்றத்தையும் போராட்டத்தையும், 21ஆம் தேதியுடன் முடித்துக் கொள்கிறோம்” என்றார்.

“இந்தியாவில் விவசாயிகள் ஒன்றுபட்டுவிட்டார்கள். விவசாயிகள் புரட்சி நீண்ட தூரத்திலில்லை. மிக நெருக்கத்தில் உள்ளதை விவசாயிகளுக்கு எதிரான பாஜக ஆட்சி உணர வேண்டும்” என்றும் ரவீந்திரன் குறிப்பிட்டார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon