மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு!

அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு நடத்த உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி குறித்து ஆய்வு நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும், 2002-2004 வரை மாவட்டக் கல்வி அதிகாரியாகக் கூடுதல் பொறுப்பு வகித்த பினாகபாணியைப் பணி நீக்கம் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது. தீ விபத்துக்குள்ளான பள்ளியை ஆய்வு செய்ய தவறிவிட்டதாகக் கூறி 2012ஆம் ஆண்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பினாகபாணி பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவை ரத்து செய்து தனக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று (நவம்பர் 21) நீதிபதி முரளிதரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பினாகபாணி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை” என்று வாதிட்டார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டப்படி பள்ளியை ஆய்வு செய்ய மனுதாரர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால், பள்ளியை முழுமையாக ஆய்வு செய்யாமல் மெத்தனமாகச் செயல்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக 12 அதிகாரிகளின் மேல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 6 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை, 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதை விசாரித்த நீதிபதி, “பினாகபாணி உட்பட அவருடன் பணி நீக்கம் செய்யப்பட்ட 5 பேரும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவருக்கு முன்பு பணியாற்றிய தலைமைக் கல்வி அதிகாரிதான் பள்ளிக்கு அனுமதி வழங்கியுள்ளார். எனவே, அவர் மீது எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து, ஓய்வு பெற்ற ஆசிரியராகக் கருதி அவருக்குச் சேர வேண்டிய பண பலனை எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணையின்போது, “நாட்டின் சொத்துகளாக இருக்கும் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்படும் இடம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். எனவே, தமிழக அரசு அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon