மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

குடிநீருக்காக அலையும் பள்ளி மாணவர்கள்!

குடிநீருக்காக அலையும் பள்ளி மாணவர்கள்!

சோளக்கொட்டாயில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீருக்காக மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி அடுத்த சோளக்கொட்டாயில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இங்கு சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகிறார்கள். ஒரு தலைமையாசிரியர், 14 முதுகலை ஆசிரியர், உட்பட மொத்தம் 44 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளி தருமபுரி மாவட்டத்தில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகளில் ஒன்று.

இங்குப் படிக்கும் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 2 மினி தொட்டிகள், ஒரு கைப்பம்பு ஆகியவை பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவை அனைத்தும் கடந்த சில மாதங்களாகப் பழுதடைந்துள்ளது. இதனால் மாணவர்கள் குடிக்க குடிநீர் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தினமும் வகுப்பறை தேவைக்காக குடத்தை எடுத்துக்கொண்டு, பள்ளி சுற்றுச்சுவருக்கு அருகில் உள்ள கைப்பம்பில் தண்ணீர் அடித்து எடுத்து வருகின்றனர்.

இதற்காக இரண்டு மாணவர்கள் அடிப்பம்பில் தண்ணீர் அடிப்பதும், இரண்டு மாணவர்கள் சுற்றுச்சுவரின் மீது அமர்ந்து, குடத்தை வாங்கி பள்ளி வளாகத்தில் உள்ளவர்களிடம் குடத்தைக் கொடுக்கின்றனர்.

தொடர்ந்து இரண்டு மாணவர்கள் தண்ணீர் குடத்தை வாங்கிக் கொண்டு செல்கின்றனர். பாதி வழியில், மேலும் இருவர் வந்து தண்ணீர் குடத்தை வாங்கிக் கொண்டு, காலி குடத்தைக் கொடுத்து அனுப்புகின்றனர்.

இந்த நிலை கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் குடிநீருக்காக, வகுப்பு நேரங்களில் அலைந்து திரிய வேண்டிய நிலை இருந்து வருகிறது. பள்ளியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்து பள்ளி தலைமையாசிரியர், ஊராட்சி செயலரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், இன்றுவரை பழுதான குடிநீர் குழாய்கள் சரி செய்யப்படவில்லை.

இதுகுறித்து தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், “அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு குறித்த புகார் எனது பார்வைக்கு வரவில்லை. தொடர்ந்து குடிநீர் குழாய்களைப் பழுது நீக்கி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon