மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

மறைவுக்குப் பின் நனவான ஜோயலின் கனவு!

மறைவுக்குப் பின் நனவான ஜோயலின் கனவு!

பிரகாசு

மேடையின் மீதிருந்த பதாகையில் தெரிந்த தன் மகனின் முகத்தை அழுதுகொண்டே தடவிப்பார்த்த தாயின் கண்ணீரும், பரிதவிப்பும் ஆழமாய் பதிந்தது ஜோயல் பிரகாஷின் ஓவியக் கண்காட்சியின் தொடக்கத்திலேயே. ஜோயல் பிரகாஷ் கல்லூரியில் வேண்டுமானால் மாணவனாக இருந்திருக்கலாம். அவன் படைப்புகளை காணும்போது அவன் நிச்சயம் இத்துறைக்கு மாணவனாக இருக்க முடியாது. கைதேர்ந்த நிபுணர் என்றுதான் கூற வேண்டும். ஆம், இதுதான் நேற்று (நவம்பர் 21) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அத்தனை குரல்களிலும் ஒலித்தது. மிக நேர்த்தியான படைப்புகள். அவன் மன எண்ணத்தின் சிந்தனைகள் அசை மாறாமல் அழகாய், மிக நேர்த்தியாய் கைகளில் இருந்து காகிதங்களுக்கு வடிந்திருக்கிறது ஓவியங்களாய்.

அப்படியொரு கலைஞனின் வாழ்நாள் மத ரீதியான வார்த்தைகளின் தாக்குதலால் மாய்ந்திருக்கிறது என்றால் இழப்பு அந்தத் தாய்க்கு மட்டுமல்ல; ஜோயலின் கைகளில் இருந்து இனி எந்த ஓவியமும், எந்தச் சிற்பமும் மலரப் போவதில்லை என்றுணரும் நமக்கும் இந்த மரணம் பேரிழப்புதான். ஒரு மாதத்தை எட்டப் போகிறது ஜோயல் பிரகாஷ் தற்கொலைக்கு தள்ளப்பட்டு. அக்டோபர் 25 தான் அந்தக் கலைஞனின் இறுதி நாள். கடமைக்குப் பொறியியல் பட்டத்தையோ அல்லது அறிவியல் பாடத்தில் ஏதேனும் ஒரு பட்டத்தையோ பெற்றுவிட்டு என்ன வேலைக்குச் செல்வது என்று தெரியாமல் அல்லது ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையைக் கொண்ட இளைஞர்களே இன்றைய சூழலில் அதிகம் தென்படுகின்றனர். ஆனால் பெரும் கனவுகளோடும், லட்சியத்தோடும் தான் சுடுமண் சிற்பக் கலைஞனாக மட்டுமே வர வேண்டும் என்று திட்டமிட்டு படித்துக் கொண்டிருந்தவன் ஜோயல்.

அந்த ஆர்வமும், ஈடுபாடும் முதல் இரண்டு ஆண்டுகள் ஜோயலின் படைப்புகளில் பெருமளவு வெளிப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பாடு கல்லூரியின் சிறந்த மாணவனாகத் ஜோயல் பிரகாஷ் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறான் என்பது நமக்கு உணர்த்துகிறது. ஜோயலின் மதம் அறிந்த பின்னர் அவன் திறமைகளை திட்டமிட்டு முடக்கி, ஒடுக்கப்பட்டிருக்கிறான், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறான் என்பது மரண வாக்குமூலமாய் தற்கொலைக்கு முன்னர் ஜோயல் பிரகாஷ் வெளியிட்ட காணொளிப் பதிவு கூறுகிறது. எப்படியாவது தன் படைப்புகளை காட்சிப் படுத்த வேண்டும் என்பது ஜோயலின் பெரும் கனவாகவே இருந்துள்ளது. பலமுறை போராடியும், கல்லூரி நிர்வாகம் ஜோயலின் படைப்புகளை காட்சிப் படுத்த விடவே இல்லை.

தற்போது ஜோயலின் மரணம் அதைக் காட்சிப் படுத்தியிருக்கிறது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (நவம்பர் 21) ஒருநாள் முழுக்க அந்தக் கலைஞனின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கூடவே தற்கொலைக்கு நீதிக் கேட்டு பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நடிகர் சத்யராஜ், இயக்குநர் ப,ரஞ்சித், இயக்குநர் ராஜு முருகன், இயக்குநர் கெளதமன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மக்கள் மன்றம் மகேசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, உள்ளிட்ட பல கட்சிகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். ஜோயல் வரைந்த ஜோயலின் ஓவியத்தை முகமூடியாக அணிந்துகொண்டு அவனுடன் படித்த கல்லூரி மாணவர்களும், நண்பர்களும் மேடையில் அந்தக் கலைஞனின் ஓவியங்களைக் கைகளில் ஏந்தி அணிவகுத்து நிகழ்வைத் தொடங்கினர்.

மாணவர்களின் கைகளில் ஏந்தப்பட்ட படங்கள் யாவும் அரங்கின் பின்பகுதியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மகனின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அழுகுரலோடு ஜோயல் பிரகாஷின் தாய் முதலில் பேசத் தொடங்கினார். “வந்து இருக்கும் எல்லோருக்கும் வணக்கம். என்னுடைய மகன் பிரகாஷ் சென்னை கவின் கல்லூரியில் நான்காமாண்டு படித்து வந்தான். ரொம்ப கஷ்டப்படறோம். அவனுடைய கனவு, லட்சியம் நிறைவேறாதபடி அந்தக் கல்லூரியில் இருக்கிற அவனுடைய ஆசிரியர்கள் செய்திருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய மகனை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் ரொம்பவே இழிவுபடுத்தி, அவமானப்படுத்திப் பேசி இருக்காங்க. அவனுடைய திறமையும், சுதந்திரமும் அவர்களால் பறிக்கப்பட்டிருக்கு. அவன் எதை நோக்கி இந்தக் கல்லூரிக்கு வந்தானோ அது அவனுக்குக் கிடைக்கல. என்மகனின் கனவு கனவாகவே போயிடுச்சு. என் மகனுடைய சாவுக்கு காரணமானவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கணும். எந்தக் கல்வி கூடங்களிலும் சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் படிக்கிற பிள்ளைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதை சட்டமியற்றி தடுக்கணும். இது போன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கொண்டு வரணும். அதுதான் எங்களுடைய கோரிக்கை” என்று கூறி முடித்ததும் தாயின் கைகளில் இருந்த மைக் ஜோயலின் தந்தைகளில் கையிற்கு இடம்மாறியது.

“பையன் ஒருநாள் கால் பண்ணான், அப்பா காலேஜ்ல ஒரு பிரச்னையா இருக்கு, நீ வந்து பேசு அப்பான்னான். நாங்க போய் பேசினோம். அதுக்கு உங்க பையன் சரியா வகுப்புக்கே வரதில்லன்னு அவங்க ஹெச்.ஓ.டி (துறைத் தலைவர்) சொன்னாரு. ஆனால், அவன் சரியாத்தான் கல்லூரிக்குப் போயிருந்தான். மேலும் அவர் மதரீதியா ரொம்ப கடுமையா இவனைப் பேசி இருக்காரு. ஒரு வேலை சோறு போட்டாக்கூட நீங்க மதம் மாறிடுவீங்கன்னு ரொம்ப இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டி இருக்காரு. இதனால தான் என்மகன் மனமுடைஞ்சு தற்கொலை பண்ணிக்கிட்டான். அவனுக்கு நீதி கிடைக்கணும்” என்றார்.

ஒருபக்கம் பார்வையாளர்கள் ஜோயல் பிரகாஷின் ஓவியப் படைப்புகளை பார்வையிட, மறுபக்கம் தலைவர்கள் மற்றும் திரைத்துறைப் பிரபலங்களின் பேட்டிகள் தொடர்ந்தது. முதலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “ஏழை குடும்பத்தைச் சார்ந்த மாணவன், பெரும் கனவுகளோடு கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தவன். மிகப்பெரிய கலைஞனாக வளர்ந்துகொண்டிருந்த அந்த மாணவன் கல்லூரி நிர்வாகத்துடைய அணுகுமுறையால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்டுள்ளான். மிகச்சிறந்த மாணவன் என்று பெயர் பெற்றுள்ள பிரகாஷ் தன்னுடைய பெயருக்கு முன்னாள் ஜோயல் என்று இணைத்துக் கொண்டதுதான் அவருடைய வாழ்வின் முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்து இருக்கிறது என்பது அவனுடைய மரண வாக்குமூலத்திலிருந்து தெரிகிறது. மாற்று மதத்தவர் என்பதால் பிரகாஷின் துறைத்தலைவர் இவரைக் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார். தனக்கு இருக்கிற ஆற்றல், தனக்கு இருக்கிற வலிமை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, தன்மானத்தை விட்டு தன்னால் வாழ முடியாது. நான் எந்தக் கடவுளை வணங்க வேண்டும் என்பது எனக்குள்ள சுதந்திரம் என்றும் அந்தக் காணொளிப் பதிவில் கூறியிருக்கிறான். அவனை ஊக்கப்படுத்த வேண்டிய துறைத்தலைவரும், கல்லூரி முதல்வரும் அவனை உதாசீனப்படுத்தியிருக்கிறார்கள். அவனை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். தன் தற்கொலைக்கு யார் காரணம் என்று தெளிவாக மரண வாக்குமூலம் ஜோயல் பிரகாஷ் கொடுத்துள்ள போதும், இதைச் சந்தேகத்துக்குரிய மரணமாகக் காவல்துறை பதிவு செய்துள்ளது, தற்கொலைக்குத் தூண்டியவர்கள், காரணமானவர்களை விட கொடூர மனதை இந்தக் காவல்துறை கொண்டிருக்கும்போல. இது தற்கொலையாக இருந்தாலும், யார் காரணம் என தெளிவாக கூறப்பட்டுள்ளதால் இதை கொலை வழக்காக மாற்ற வேண்டும்” என்றார்.

தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “இந்தச் சம்பவம் நடந்தது முதல் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள், இயக்கங்கள் போராடி வருகிறோம். தற்கொலைக்குத் தூண்டப்பட்டுள்ளது என வழக்கை மாற்ற வேண்டும் என காவல்துறைக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், காவல்துறை விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அரசும், காவல்துறையும் உடனடியாக செவி சாய்க்கவில்லை என்றால் நீதிமன்றத்தின் மூலம் அழுத்தம் தருவோம்” என்றார்.

அடுத்ததாக இந்த நிகழ்வு ஒருங்கிணைப்பில் முக்கியப் பங்காற்றிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசுகையில், “நம்முடைய சாதிய சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் கிராமத்தில், கல்லூரியில், தெருவில் படுகிற அவலங்களை நாம் அறிந்திருப்போம். அந்த அவலங்களை மாணவர் ஜோயல் பிரகாஷும் பட்டிருப்பார். அப்போதெல்லாம் தாங்கிக்கொண்டு தன்னுடைய கலையை வளர்த்துக் கொண்டிருந்த ஜோயல் பிரகாஷ் அதைவிட பெரும் அவமானங்களைச் சந்திக்க நேர்ந்துதான் இந்த தற்கொலை நடந்திருக்க வேண்டும். வட இந்திய கல்வி நிறுவனங்களில் நடந்து வந்த இதுபோன்ற சம்பவங்கள் தற்போது தமிழகத்திலும் தொடங்கியிருக்கிறது. இதைக் கட்டாயமாக எதிர்க்க வேண்டும். எந்த அளவுக்கு உண்மையோ... இந்த தற்கொலை செய்திகளை வெளியிட வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். நீங்கள் இதை விரிவாக வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

ஏற்கெனவே சில தினங்களுக்கு முன்னர், மாணவர் ஜோயல் பிரகாஷின் தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டித்து நடிகர் சத்யராஜ் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். தற்போது இந்த நிகழ்விலும் அவர் தனது அழுத்தமான கண்டனத்தைப் பதிவு செய்தார். அவர் கூறுகையில், “பிறப்பின் அடிப்படையில் ஒருவரை மட்டம் தட்டி, அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குக் கொண்டு செல்கிறதென்றால் இந்தச் சமூகம் பின்னோக்கிச் செல்கிறது என்று அர்த்தம். தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு உதவி செய்து மேலே தூக்கிவிட்டால்தான் இந்த சமூகம் முன்நோக்கிச் செல்கிறது என்று அர்த்தம்” என்றார்.

இறுதியாக இயக்குநர் ப.ரஞ்சித் பேசும்போது, “நானும் கவின் கல்லூரியில் தான் படித்தேன். இந்தக் கல்லூரியைப் பொறுத்தவரையில் மூன்று வகையான பிரச்னைகள் உள்ளன. உள்கட்டமைப்பு, சாதியம், இப்போது மதவாதம் மூன்று பிரச்னைகளும் இந்தக் கல்லூரியில் நிலவுகிறது. இதற்கு முன்னரே இந்தக் கல்லூரியில் சிலர் சாதி, மத ரீதியான வார்த்தை தாக்குதலால் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் அவற்றுக்கு எந்த உரிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.

ரோகித் வெமுலா, முத்துக்கிருஷணன், சரவணன், தற்போது ஜோயல் பிரகாஷ் என தொடரும் தற்கொலைகள் கல்வி நிலையங்களில் சாதி, மத சக்திகள் வளர்ந்து வருவதன் அறிகுறியாகவே சமூகத்துக்கு வெளிப்படுகிறது. கைகளில் சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் கயிறுகளை கட்டிச்செல்வது, உயர்கல்வி நிலையங்களில் சாதிய குழுக்களாக இணைந்து செயல்படுவது போன்ற செயல்பாடுகள் சமீப காலமாக அதிகரித்து வருவது என்பது நடிகர் சத்யராஜ் கூறியது போல இந்த சமூகம் நாகரீக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி செல்வதையே உணர்த்துகிறது. சாதி பெயர்களை பெயருக்குப் பின்னால் இருந்து தூக்கி எறிந்த தமிழ்நாட்டில் கல்வி நிலையங்களுக்குள் சாதி, மத ரீதியான வார்த்தை தாக்குதல்கள் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. அனிதா, ஜோயல் பிரகாஷ் போன்ற மரணங்கள் இனியும் தொடராதிருக்க இந்தக் கூட்டத்தில் கல்வி உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பின் சார்பில் வரும் 28ஆம் தேதி ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி கேட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon