மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

மின்சாதனங்களின் வரி குறையுமா?

மின்சாதனங்களின் வரி குறையுமா?

வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களுக்கான வரி விகிதங்கள் அடுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவற்றின் விலையும் குறையும் என்பதால் நுகர்வோரிடையே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கவுகாத்தியில் நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கலந்தாய்வுக் கூட்டத்தின் முடிவில், மக்களின் அத்தியாவசியப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட 178 பொருள்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக மத்திய அரசு அதிரடியாகக் குறைத்தது. இதில் ஏ.சி, வாஷிங் மெஷின் ஆகிய ஒரு சில மின்சாதனங்களின் வரி விகிதம் 28 சதவிகிதத்திலேயே நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தப் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரியையும் அடுத்த ஜி.எஸ்.டி. கலந்தாய்வுக் கூட்டத்தில் குறைக்க வாய்ப்புள்ளது. ஜி.எஸ்.டி. வரிச் சலுகை கிடைக்காத அனைத்துத் துறைகளிடமிருந்தும் தொடர்ந்து கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளதால் இந்த வரிக் குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் நிதி ஆலோசனை நிறுவனமான டெலாய்ட் நிறுவனத்தின் பங்குதாரர் எம்.எஸ்.மணி கூறுகையில், “பொருள்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதால் இந்தியாவிலுள்ள அனைத்து உற்பத்தியாளர்களும் ஊக்கமடைந்துள்ளனர். எனவே, வாஷிங் மெஷின் போன்ற மின்சாதனங்களின் வரியையும் குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஏசி வசதி பெற்ற உணவகங்கள் உள்பட அனைத்து உணவு விடுதிகளுக்கான வரி விகிதம் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. மேலும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக மின்சாதனப் பொருள்களுக்கான வரியைக் குறைப்பதால், பெண்களின் பணிச் சுமைகள் குறைக்கப்பட்டுக் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். எனவே, அடுத்த கலந்தாய்வின் முடிவில் இதற்கான வரியும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே டோஸ்ட்டர், வாக்யூம் கிளீனர், அயர்ன் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon