மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

மசூதியில் வெடிகுண்டு வெடித்து 50 பேர் பலி!

மசூதியில் வெடிகுண்டு வெடித்து 50 பேர் பலி!

நைஜீரியா நாட்டின் மசூதி ஒன்றில் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 50 பேர் பலியாகினர் என போலீஸ் தெரிவித்து உள்ளது.

நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடமாவா மாநிலத்தின் முபி நகரில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்த தாக்குதலில் 50க்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் அடமாவா மாநில காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒத்மான் அபூபக்கர் தெரிவித்துள்ளார். படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்தத் தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சரிசமமான எண்ணிக்கையில் வாழ்ந்துவரும் நிலையில் இஸ்லாமிய சட்டதிட்டத்துக்கு உட்பட்ட அரசை நிறுவ வேண்டும் என்று கூறி ஒரு பிரிவினர் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபகாலமாக தற்கொலைப் படை தாக்குதல்கள் நைஜீரியாவில் அதிகமாக இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் நைஜீரியா நாட்டின் போர்னோ மாநில தலைநகரான மைடுகுரி நகரின் மத்திய பகுதியில் உள்ள திக்வா பகுதியில் பிரபலமான மசூதி ஒன்றில் ஒரு பெண் தீவிரவாதி உடல் முழுவதும் வெடிகுண்டைக் கட்டிக்கொண்டு புகுந்தார். அந்தப் பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை திடீரென்று வெடிக்க வைத்தாள். இதில், அந்தப் பெண்ணின் உடல் பாகங்கள் சின்னாபின்னமாகச் சிதறி கிடந்தன. இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இதே மைடுகுரி நகரில் உள்ள மோலை கொலேமரி பகுதியில் போக்கோஹரம் தற்கொலைப் படையை சேர்ந்த நான்கு பெண் தீவிரவாதிகள் கடந்த ஜூலை மாதம் நடத்திய மனிதகுண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற தாக்குதலில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா, நைஜீரியா மற்றும் சோமாலியா ஆகிய ஐந்து நாடுகளைச் சார்ந்தவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon