மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 20 அக் 2020

அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

‘நடிகர் கமல்ஹாசனை விமர்சிப்பதை விட்டுவிட்டு, தமிழக மீனவர்களைச் சுட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஜெயக்குமார் முயல வேண்டும்’ என எம்.எல்.ஏ. கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

நடுக்கடலில் இந்தியக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜான்சன், பிச்சை ஆகிய மீனவர்கள் காயமடைந்தனர். இதற்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு விளக்கமளித்துப் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா இந்திய கடற்படையினுடையது அல்ல’ என்றிருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் தற்போது காயமடைந்த மீனவர்கள், ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியிலுள்ள தங்களது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகின்றனர். இருவரையும் நேற்று (நவம்பர் 21) அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ. கருணாஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், “இந்திய கடற்படையால் தாக்கப்பட்ட மீனவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் கடலோர காவல்படை அதிகாரிகளே வருத்தம் தெரிவித்துள்ளனர். ஆனால், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘இந்திய கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படவில்லை’ என்று கூறியுள்ளது கண்டனத்துக்குரியது. மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது” என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பற்றி பேசிய அவர், “கமல்ஹாசனை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தீர்வு காணும் நடவடிக்கைகளில் அமைச்சர் ஜெயக்குமார் ஈடுபட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon