மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 24 அக் 2020

மலையாள நடிகைகளைப் பிடிக்க என்ன காரணம்?

மலையாள நடிகைகளைப் பிடிக்க என்ன காரணம்?

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 4ஜி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக உள்ள காயத்ரி சுரேஷ் தற்போது தெலுங்குத் திரையுலகிலும் அடியெடுத்து வைக்கிறார்.

2014ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டம் வென்ற காயத்ரி 2015ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு ஆண்டுகளில் எட்டு படங்களில் நடித்துள்ள அவர், தற்போதுதான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தெலுங்கில் அனிஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தருணுக்கு ஜோடியாக காயத்ரி ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படம் குறித்து காயத்ரி டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில், “தயாரிப்பு நிறுவனத்தினர் எனது புகைப்படத்தை பார்த்துவிட்டு ஆடிஷனுக்கு அழைத்தனர். ஆடிஷன் மற்றும் போட்டோ ஷூட்டில் கலந்துகொண்டேன். விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளேன். அதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறும் காயத்ரி, “தெலுங்கு படங்களைப் பார்த்துவருகிறேன். அல்லு அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களுக்கு கேரளாவில் நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ஃபிடா படத்தில் சாய் பல்லவியின் வசனங்களைப் பார்த்து பிரமித்துப் போனேன். மற்ற மொழிப் படங்களில் நடிக்கும்போது நிறைய ரசிகர்களைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இது எனது திரையுலக வாழ்வில் வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டுகிறது. தெலுங்கு கற்க வகுப்புகளுக்குச் செல்கிறேன். ஒரு இடத்தின் மொழியை முறையாக கற்றுக்கொண்டால்தான் அதன் கலாசாரங்களை அறிய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘தெலுங்கு ரசிகர்களுக்கு மலையாள நடிகைகளைப் பிடிப்பதற்கு என்ன காரணம்?’ என்று கேட்கப்பட்ட போது, “இது எப்படி நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், கேரளப் பெண்கள் அழகாக இருப்பதோடு யதார்த்தமாக நடிக்கக்கூடியவர்கள். பெரும்பாலான தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மலையாள சினிமாவைத் தொடர்ந்து பார்த்துவருவதும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 22 நவ 2017

chevronLeft iconமுந்தையது