மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

இந்திரஜித்: பிரம்மாண்ட ஆச்சரியங்களின் தொகுப்பு!

 இந்திரஜித்: பிரம்மாண்ட ஆச்சரியங்களின் தொகுப்பு!

விளம்பரம்

வணக்கம், நான் இந்திரஜித் படத்துடைய ஒளிப்பதிவாளர் ராசாமதி. நவம்பர் 24ஆம் தேதி படம் ரிலீஸாகுறதால நான்கு நாட்கள் மட்டுமே மீதமிருக்க நிலையில், இந்திரஜித் படத்துக்கான சில வேலைகள்ல ரொம்ப பிஸியா இருந்தேன். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு டிவிட்டர் பக்கம் வந்தப்பதான் இந்திரஜித் படத்திலிருக்கும் ஒளிப்பதிவு முறைகளைப்பற்றி மின்னம்பலம் எழுதியிருந்த ‘ராசாமதி ஒளி ஓவியம்’ கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. வாய்மை படத்துக்கும், இந்திரஜித் படத்துக்குமான வித்தியாசம் முதல் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருந்ததால, இங்க படத்துல வொர்க் பண்ணப்ப எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நானும் பகிர்ந்துக்கலாம்னு முன்வந்திருக்கேன்.

கலாபிரபுவும் நானும் பல வருட நண்பர்கள். நான் 20 படங்களுக்கு அசிஸ்டண்டா வொர்க் பண்ணிட்டு ஒரே ஒரு குறும்படம் இயக்கியிருந்த நேரத்துல எனக்கு சக்கரகட்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அது அவனுடைய முதல் வாய்ப்பு(நாங்க நெருங்கிய நண்பர்கள். அதனால அவன்/இவன் என்ற ஏகவசனத்தை பெருசா எடுத்துக்கவேண்டாம்). அதில் வொர்க் பண்ண எத்தனையோ பெரிய ஒளிப்பதிவாளர்கள் தயாரா இருந்தபோது எனக்கு கொடுக்கப்பட்ட அந்த வாய்ப்பு எப்படி கதைக்கான ஒளிப்பதிவாளரா என்னை முன் நிறுத்துச்சோ, அதேமாதிரி தான் இந்திரஜித் படமும். கதை சொல்லும்போது என்ன சொன்னானோ அதை அப்படியே எடுத்திருக்கான் கலா. எப்பவுமே ஒரு இயக்குநருக்கு தன் கதையை எப்படி படமாக்கணும்னு பெரிய கற்பனைகள் இருக்கும். ஆனா, ரியாலிட்டில அது முடியாது என தெரியவரும்போது சில சமரசம் செய்யவேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், கலா தன்னுடைய நோக்கம் என்ன அப்படிங்குறதுலயும், அதை எப்படி சினிமாவா கொண்டு வரமுடியும்ங்குறதுல தெளிவாகவும் இருந்ததால நினைத்ததை அப்படியே எடுத்திருக்கான்.

ஒரு காட்சிக்கு எந்த கேமரா வியூ நல்லா இருக்கும்னு நினைக்காம, எங்க இருந்து பார்த்தால் மக்களுக்கு அது ரசிக்கக்கூடிய விதத்துல இருக்கும்னு அவனுடைய ஸ்டோரிபோர்டு தெளிவான விளக்கத்தைக் கொடுத்துச்சு. இவ்வளவு விளக்கத்தை ஒரு இயக்குநர் கொடுத்ததுக்கு அப்பறம் ஒளிப்பதிவாளரா எந்த விதத்துலயும் தயங்கி நிற்கவேண்டிய காரணம் இல்லை.

மலை, பள்ளத்தாக்கு, காடு இப்படி எல்லா இடத்தையும் ஒரே படத்துல கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைக்க முடிவு பண்ணபோதும்கூட படம் பார்க்க வர்ற மக்களை ஒரு பயணியாக கதையுடன் கொண்டுபோகவே விருப்பப்பட்டோம். அதனால், எந்த சமயத்துலயும் கேமராவை ரசிகர்களுக்கு நேரடியா வைக்காம, அவங்களை ஒரு ஓரமா நிற்க வைத்து கதை நடக்குறதை வேடிக்கை பார்ப்பது மாதிரியே படமாக்கியிருக்கோம். அது ரொம்ப வே சேலஞ்சா இருந்தது.

ரோடு மேல கதை நடக்கும்போது, நாங்க ஏதாவது புதருக்கு நடுவில் கேமராவுடன் உக்காந்திருப்போம். பாம்பு, பூச்சி எது இருக்குன்னும் கவலைப்படக்கூடாது. கேமரா யூனிட்ல இரண்டு பேர் தான் இருப்போம். காடுகளில் வசிக்கிறவங்க, இப்ப தான் யானைக்கூட்டம் இந்தப்பக்கம் போச்சுன்னு சொல்லுவாங்க. அதனால எப்பவுமே ஓடுறதுக்கு ரெடியா இருப்போம். கிங் காங் படத்துல கேமராவைத் தூக்கிட்டு ஓடுற ஜேக் பிளாக் மாதிரி ஓடணும்னு எங்களுக்குள்ள பேசி சிரிச்சு பயத்தை மறைக்க முயற்சி பண்ணுவோம்.

இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில் நாங்க கொடுத்த உழைப்புக்கான ரிசல்ட் டிரெய்லர்லயே கிடைச்சிருக்கு. மொத்த டிரெய்லரில் இருக்கும் காட்சிகள்ல 12 சதவிகிதம் தான் கிராஃபிக்ஸ் இருக்கு. அதுவும் ரியலான ஒரு இடத்துல ஷூட்டிங் எடுத்திட்டு சின்ன சின்ன கிராஃபிக்ஸ் வொர்க் மட்டும்தான் பண்ணிருக்கோம். மொத்த படத்துல 30 சதவிகிதம் மட்டும் தான் கிராஃபிக்ஸ். படம் பார்த்தவங்க இந்த கிராஃபிக்ஸ் அழகா இருக்குன்னு சொல்றாங்க. இல்லை, அது ரியலா எடுத்ததுன்னு சொன்னா நம்ப மாட்றாங்க. சில காட்சிகளுக்கு இவ்வளவு ரியலா எடுத்திருக்கீங்களேன்னு சொல்லும்போது, இது கிராஃபிக்ஸுன்னு சொன்னா ஒரு மாதிரி பார்க்குறாங்க. இந்த விஷயத்தை தான் எங்க வெற்றியா பார்க்குறோம். இதுக்கு முக்கிய காரணம் கலா பிரபு ஒரு விஷுவல் டைரக்டரா இருக்கிறது தான். ஷங்கர், ராஜமவுளி வரிசைல இந்த தலைமுறைக்கு கிடைச்சிருக்க முக்கியமான இயக்குநர் பிரபு. இது இந்திரஜித் படம் வெளிவந்தா எல்லாருக்கும் புரியும். இது ஏற்படுத்தும் தாக்கம் அடுத்தடுத்து அட்வென்சர் ஆக்‌ஷன் படங்கள் எடுக்குறதுக்கான ஆர்வத்தை தமிழ் சினிமாவுக்குக் கொடுக்கும்.

சினிமாவுக்கு மட்டுமில்லை, ஆர்டிஸ்ட்களுக்கும் சேர்த்து இந்தமாதிரி உழைப்பைக் கொடுத்தா இந்தமாதிரி பாராட்டு கிடைக்கும்ங்குறது தெரியவரும். இந்திரஜித்துக்கு கௌதம் & சொனாரிகா - அஷ்ரிதா ஆகிய இரண்டுபேர் கொடுத்த உழைப்பு சாதாரணமானதில்லை. ஹீரோயின்ஸ் இரண்டு பேரும் எங்களை இப்படியெல்லாம் அழகா காட்டணும்னு எந்த டிமாண்டும் பண்ணாம, கதைல அவங்க யார்? அதற்கு என்ன தரணும்னு மட்டும் நடிச்சது வழக்கமான ஹீரோயின்கள் செய்யாத விஷயம்.

கௌதம் செய்த ஒரு முக்கியமான செயலை சொல்லியே ஆகணும். முக்கியமான ஒரு சேஸிங் சீன் படத்துல இருக்கு. பைக், ஓட்டிக்கிட்டு வர்ற கௌதம் கேமராவை கிராஸ் பண்ற மாதிரி ஒரு சீன். அதை ஷூட் பண்ணிக்கிட்டு இருந்தப்ப பைக் ஓட்டிக்கிட்டு போன கௌதம் ஒரு கல் மேல பைக் டயர் ஏறுனதால கீழ விழுந்துட்டார். அப்படி விழும்போது கேமரா Frame உள்ள விழுந்துட்டா அந்த சீன் முழுக்க வீணா போய்டும்னு யோசிச்சு, அந்தப்பக்கமா இருந்த கல்குவியல் மேல விழுந்து காலில் காயம் பட்டுடுச்சு. ஷாட்டுக்குள்ள விழுந்திருந்தா கூட ரீ-டேக் பண்ணிக்கலாம். இப்ப அடிபட்டு அன்னைக்கு ஷூட்டிங் பேக்-அப் சொல்லவேண்டிய நிலை வந்திடுமோன்னு யோசிச்சப்ப ‘வாங்க ப்ரோ நெக்ஸ்ட் ஷாட் எடுக்கப்போகலாம்’ சொல்லி கிளம்பிவந்தார். இந்தமாதிரியான பல உழைப்புகள் இந்திரஜித் படத்தை ரசிகர்களுக்கான விஷுவல் டிரீட்டா மாத்துறதுக்காக கொடுக்கப்பட்டிருக்கு. அந்த உழைப்பின் பலன் நவம்பர் 24ஆம் தேதி உங்கள் மூலமா எங்களுக்கு கிடைக்கும். அதற்காக காத்திருக்கும் இந்திரஜித்தின் பல ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் ஒளிப்பதிவாளர் ராசாமதி. நன்றி, வணக்கம். நவம்பர் 24ஆம் தேதி தியேட்டர்ல கேமரா மூலம் உங்களுடன் மீண்டும் பேசுவேன்.

விளம்பர பகுதி

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon