மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

டிஜிட்டல் திண்ணை!

டிஜிட்டல் திண்ணை!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக். “போயஸ் கார்டனுக்கு போலீஸ் பாதுகாப்பு ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் விவேக் மூலமாக நியமிக்கப்பட்டுள்ள பிரைவேட் செக்யூரிட்டிகளும் கார்டனை சுற்றி இருக்கிறார்கள்.” போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு எதிரே இருந்த ஒரு அபார்ட்மெண்ட், ஜெயலலிதா இருந்த சமயத்திலேயே வாடகைக்கு எடுக்கப்பட்டு செக்யூரிட்டி ஆபீஸர்ஸ் தங்குவதற்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போதும் அதே அபார்ட்மெண்ட்டில்தான் போலீஸாரும், பிரைவேட் செக்யூரிட்டிகளும் தங்கி இருக்கிறார்கள். ஜெயலலிதா இருந்த சமயத்தில் வேதா இல்லத்தின் மெயின் கேட்டில் பஞ்சாப்கார சிங் ஒருவர்தான் கேட் கீப்பராக இருந்தார். இப்போதும் அவரே அங்கு இருக்கிறார். கார்டன் பக்கம் யார் வந்தாலும், போலீஸாருக்கு முன்பாக பிரைவேட் செக்யூரிட்டிகள்தான் நிறுத்தி விசாரிக்கிறார்கள். கார்டனுக்கு யார் வருகிறார்கள்... யார் போகிறார்கள் என்ற தகவலை இந்த பிரைவேட் செக்யூரிட்டிகள்தான் உடனுக்குடன் விவேக்கிற்கு சொன்னபடி இருக்கிறார்கள்.

கேட் கீப்பராக இருக்கும் பஞ்சாப் சிங் மட்டும் வேதா இல்லத்தின் கேட்டை திறந்து சர்வ சாதாரணமாக உள்ளே போகிறார்... வருகிறார். சமையல்கார பெண்கள் இருவரும் உள்ளே இருக்கிறார்கள். போயஸ் கார்டனில் மெயின் கேட் தொடங்கி உள்ளே ஒவ்வொரு அறைக்குமே சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி கேமராவை கண்காணிக்கும் அறை, கார்டனில் உள்ள அலுவலகத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், விவேக்கின் செல்போனிலும் இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்ப்பது போல சர்வர் லிங்க் செய்யப்பட்டு இருந்தது. விவேக் எங்கே இருந்தாலும், அவர் நினைத்த நேரத்தில் போயஸ் கார்டனை கண்காணிப்புக் கேமரா மூலமாக பார்ப்பார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கூட இது தொடர்ந்தபடிதான் இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு போயஸ் கார்டன் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகுதான் விவேக்கிற்கு கொடுக்கப்பட்டிருந்த சர்வரின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதில், விவேக் ரொம்பவே டென்ஷன் ஆகியிருக்கிறார். ‘என் மொபைலுடன் கார்டன் சர்வர் இணைக்கப்பட்டது டெக்னீஷியன் சிலருக்கு மட்டும்தான் தெரியும். அப்படி இருந்தும் இதை எப்படி கண்டுபிடிச்சாங்கன்னு தெரியலை. அப்போ உள்ளே இருக்கிறவங்களே நம்மை காட்டிக் கொடுக்கிறவங்களா மாறிட்டாங்களா? இவங்களை நம்பி நாம என்ன செய்யுறது?’ என்று கூட அவர் புலம்பியிருக்கிறார்.

போயஸ் கார்டனில் இருந்து வருமான வரித் துறையினர் சில லேப்டாப்களையும், பென் டிரைவ்களையும் அள்ளிச் சென்றதை நான் ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அந்த லிஸ்டில் வருமான வரித் துறை எடுத்துச் சென்ற இன்னொரு முக்கிய ஆவணம் என்ன தெரியுமா? கார்டனின் சிசிடிவி ஃபுட்டேஜ் அடங்கிய ‘ஹார்ட் டிஸ்க்’. கார்டன் அலுவலக லாக்கரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ‘ஹார்ட் டிஸ்க்’களை வருமான வரித் துறையினர் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், அதைப் பற்றியும் சசிகலா அண்ட் கோ கவலை இல்லாமல்தான் இருக்கிறது. காரணம், அந்த சிசிடிவி ஃபுட்டேஜில், சில நாட்கள், குறிப்பாக 22ஆம் தேதி ஃபுட்டேஜ் பதிவுகள் எதுவுமே அந்த ஹார்ட் டிஸ்கில் இல்லையாம். ( கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.) அது அத்தனையும் ஜெயலலிதா உயிருடன் இருந்த சமயத்திலேயே சசிகலா, நீக்கச் சொல்லிவிட்டாராம். அதனால், எதைக் கொண்டு போனாலும் எந்தக் கவலையும் இல்லை என்றிருக்கிறார்கள் விவேக் குடும்பத்தினர்.”என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன் அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றையும் டைப்பிங் செய்ய ஆரம்பித்திருந்தது.

“மெகா ரெய்டுக்குப் பிறகு டிடிவி அணியில் இருக்கும் மிக முக்கியமான இருவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்துள்ளதாம். எந்த நேரமும் தினகரனே சரணம் என பேசி வருபவர்கள் ரொம்பவே அமைதியாக இருக்கிறார்களாம். ‘இவங்களால எதுவுமே செய்ய முடியாது. இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியதுதான். இவங்களை நம்பி வந்த நமக்கும் எதுவும் செய்ய மாட்டாங்க. அப்புறம் எதுக்காக நாம இங்கே இருக்கணும்?’ என்று அந்த இருவரும் பேசி இருக்கிறார்கள். இவர்களின் மன வருத்தம் தெரிந்து கொங்கு மண்டலத்தில் பவர் புல்லாக இருக்கும் அமைச்சர் ஒருவர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி வருகிறாராம். அதனால், எந்த நேரத்திலும் எடப்பாடி பக்கம் காற்று வீச ஆரம்பிக்கலாம். என்று முடிந்த மெசேஜுக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

“இப்படிச் சொன்னா எப்படி? எதாவது க்ளூ இல்லையா?” என ஃபேஸ்புக் கேட்க... “இருவரில் ஒருவர் எம்.எல்.ஏ., இன்னொருவர் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர்!” என்று பதிலளித்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

செவ்வாய், 21 நவ 2017

அடுத்ததுchevronRight icon