மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

அணிகள் இணைந்தன: மனங்கள்?

அணிகள் இணைந்தன: மனங்கள்?

ஜெயலலிதா இறந்தபின்பு சசிகலா தலைமையில் ஓர் அணி, பன்னீர் செல்வம் தலைமையில் ஓர் அணி என அதிமுக இரண்டுபட்டது. இடையில் சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓர் அணி உருவாக்கி டிடிவி. தினகரன் தரப்பினர் தனித்து விடப்பட்டனர்.

எடப்பாடி – பன்னீர் செல்வம் அணிகளை இணைப்பதற்காகப் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியில், கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இரு அணிகளும் இணைந்தன. பன்னீர் செல்வத்திற்குத் துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி வழங்கப்பட்டன. பன்னீர் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அணிகள் இணைந்தாலும், இரு தரப்பு நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. இதனால், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, மைத்ரேயன் எம்.பி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் போன்றோர் அதிருப்தியுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. மீனவ அமைச்சர் ஜெயக்குமார் மீனவ மக்களுக்கு எதுவும் செய்ததில்லை, எனது அரசியல் பயணத்தை முடக்கப் பார்க்கிறார் என மதுசூதனன் வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார்.

அக்டோபர் 14ஆம் தேதி புதுக்கோட்டையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு அவரது ஆதரவாளர்கள் தனித் தனி வரவேற்பு வைத்தனர்.

இந்நிலையில், பன்னீர் செல்வம் ஆதரவாளரான மைத்ரேயன் இன்று (நவ.21) தனது முகநூல் பக்கத்தில் “ஓ.பி.எஸ். – ஈ.பிஎஸ் அணி இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்று நான்காவது மாதம் தொடங்குகிறது. மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?” எனப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், இரு அணிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன என்பது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது.

செவ்வாய், 21 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon