மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

ஆய்வு தொடரும்: ஆளுநர் புரோகித்

ஆய்வு தொடரும்: ஆளுநர் புரோகித்

கோயம்புத்தூரில் நடந்த ஆய்வு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் நவம்பர் 14 அன்று கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்குத் தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநில சுயாட்சி உரிமைகளை ஆளுநர் நசுக்குவதாகவும், மத்திய அரசின் தூண்டுதலால் அரசியலில் தலையிடுவதாகவும் கடுமையான குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இந்த நிலையில் இந்த ஆய்வு குறித்து ஆளுநர் புரோகித் நேற்று (நவம்பர் 20) இரண்டு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நான் அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டே நடந்து வருகிறேன். மத்திய அரசின் தூண்டுதலால் அரசியலில் தலையிடுவதாகக் கூறுவது துரதிஷ்டவசமானது. இது அடிப்படையற்ற, அபாண்டமான குற்றச்சாட்டாகும். ஆளுநரின் ஆய்வை அரசியலமைப்பின் எந்தப் பிரிவும் தடுக்கவில்லை. ஆய்வுக்கான வழிமுறைகள் குறித்து அரசியல் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு முன்னர் அசாம் மாநிலத்தில் கூட ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் பெரும் வரவேற்பு பெற்றது. அதேபோல தமிழகத்திலும், அதிகாரிகளைச் சந்தித்து ஆய்வு செய்வது தொடரும்” என்று கூறியுள்ளார்.

முன்னதாக நவம்பர் 18ஆம் தேதி சிவகங்கையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பின்னர் சென்னை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோவையில் ஆளுநர் புரோகித் ஆய்வு ஏதும் நடத்தவில்லை. அரசின் திட்டங்களைத் தெரிந்துகொள்கிறார்” என்று கூறியிருந்தார். தற்போது ஆளுநர் புரோகித், தான் ஆய்வுதான் நடத்தினேன் என்று நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பாஜகவின் கைப்பாவையாக மாநில அரசு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில் ஆளுநரும் தன் பங்குக்கு ஆய்வு தொடரும் என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon