மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

சிறப்புக் கட்டுரை: தமிழகத் திட்டக்குழுவும் ஆதிசேசய்யாவும்!

சிறப்புக் கட்டுரை: தமிழகத் திட்டக்குழுவும் ஆதிசேசய்யாவும்!

ஆ. அறிவழகன்

1971ஆம் ஆண்டு மே மாதம் அப்போதைய தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களைக்கொண்டு மாநிலத் திட்டக் குழு அமைக்கப்பட்டது. இதன் துணைத் தலைவராக இ.பி.ராயப்பா அவர்களும், உறுப்பினர்களாக டாக்டர் மால்கம் ஆதிசேசய்யா, தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம், டாக்டர் பி.நடராஜன், டாக்டர் வி.சண்முகசுந்தரம் அவர்களும் நியமிக்கப்பட்டார்கள். இந்தக் குழு அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு (1972—1984) தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைத் தயாரித்து அரசுக்கு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது. இதில் குறிப்பாக கல்வி, அறிவியல், தொழில்நுட்பத் திட்ட ஆய்வுகளுக்கு டாக்டர் மால்கம் ஆதிசேசய்யா பொறுப்பு வகித்தார்.

இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளையும், கருத்தரங்கங்களையும் நடத்தி 1973ஆம் ஆண்டு முதலமைச்சரிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. அடுத்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கான திட்ட வரைவு அறிக்கையில் தமிழகத்தின் இயற்கை வளங்கள் அத்தனையையும் மையப்படுத்தி ஒரு முற்போக்கான அறிக்கை தயாரித்து அளிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்தியிருந்தால் கல்வி, தொழிலாளர் நலன், அறிவியல் வளர்ச்சி, தொழில்வளம், இயற்கைவளம், மக்களின் உடல்நலம் ஆகிய அனைத்திலும் தமிழகம் மிகச்சிறந்து விளங்கி, இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் எட்டமுடியாத உயரத்துக்குப் போயிருக்கும். மாநிலத்தில் திட்டக்குழு அமைத்து மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருந்த தமிழகம் இப்போது ஒவ்வொரு பருவகால மாற்றத்துக்கும் தள்ளாடிக்கொண்டிருக்கிறது; தன் இயற்கை வளத்தை இழந்துகொண்டிருக்கிறது.

இயற்கைச் சீற்றம், பஞ்சம், வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டியிருந்ததாலும், மத்திய அரசின் நிதி போதுமான அளவுக்கு கிடைக்காததாலும் ஆதிசேசய்யாவை தலைமையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட திட்டக் குழுவின் அறிக்கையை மாநில அரசால் உடனடியாகச் செயல்படுத்த முடியவில்லை.

அறிவியல் விழிப்புணர்வு

இந்தப் பொது வரைவு அறிக்கையைத் தவிர, தமிழகத்தின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கான ஒரு தனி திட்ட அறிக்கையையும் ஆதிசேசய்யா முன்வைத்திருந்தார். இதில், Tamil Nadu Science Foundation; Tamil Nadu Academy of Basic and Applied Sciences; Hall of Science and Industry in Tamil Nadu; Computer Centres; Centre of Ocean Engineering and Marine Sciences; Institute of Management; Materials Testing Bureau; Centre of Automotive Engineering and Development ஆகிய எட்டு நிறுவனங்களைத் தமிழக அரசு தொடங்குவதற்குப் பரிந்துரை செய்திருந்தார். இந்த நிறுவனங்களைத் தொடங்கி செயல்படுவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான நிதி வளத்தையும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிடத் தவறவில்லை.

மேலும் அவர், “தமிழ்நாட்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக்காகத் திட்டமிடுவதற்கு முன், இயற்கை வளங்களான நிலம், நீர், தாது மற்றும் எரிசக்தி வளங்களின் அளவுகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியக் குடியரசின் மற்ற பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இவ்வளங்கள் குறைவாகத்தான் உள்ளன. ஆனால் கல்வி, தொழிலாளர்கள், மக்கள்தொகை போன்றவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால் மற்ற மாநிலங்களைவிட மேம்பட்டதாகவே உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“நான் ஒரு பத்தாண்டு திட்ட நகலைத் தயாரித்து, ‘ஓர் கற்கும் சமூகத்தை நோக்கி’ என்று பெயரிட்டு புத்தக வடிவில் பதிப்பும் செய்துவிட்டேன். திட்ட ஆய்வினை ரகசியமாக வைத்துக்கொள்ளாமல் புத்தக வடிவில் வெளியிட்டதைக் குறித்து திட்டக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் கவலை கொண்டு அஞ்சினார்கள். இதைத் திட்டக் குழுவின் தலைவரான கலைஞரின் கவனத்துக்கும் கொண்டு வந்தனர். திட்ட ஆய்வினைப் படித்துவிட்டு கலைஞர் திட்டக் குழு உறுப்பினர்களான எங்களை நோக்கி, ‘இது மிகவும் போற்றுதலுக்குரிய பணியாகும். குழுவின் எல்லா உறுப்பினர்களும் இவ்வாறே செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ எனச் சொன்னார். கலைஞரின் இச்சொற்கள் என் நினைவில் இன்றும் உள்ளன” என்று ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார் ஆதிசேசய்யா.

முழுமைபெறாத கனவு

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு அதாவது 1983ஆம் ஆண்டுதான் தமிழக அரசால் ‘Tamilnadu Science and Technology Centre’ ஆரம்பிக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு பி.எம். பிர்லா கோளரங்கமும், 1990ஆம் ஆண்டு பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையமும் ஏற்படுத்தப்பட்டன. இத்தகைய அறிவியல் காட்சியகத்தையும், தொழில்நுட்ப மையத்தையும் முக்கிய நகரங்களான திருச்சி, மதுரை, கோயம்புத்தூரிலும் பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அமைத்து மாணவர்களையும், பொதுமக்களையும் அறிவியல் விழிப்புணர்வு செய்யலாம் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஆதிசேசய்யா. ஆனால், இன்று தென் தமிழகத்தின் தலையாய நகரான மதுரையில்கூட இது அமைக்கப்படவில்லை.

மத்திய அரசின் ‘National Council of Science Museums’ உதவியால் கோவையில் அறிவியல் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் 1999ஆம் ஆண்டு அண்ணா அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடுப்பினை மதுரை மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. 2006-07 ஆம் ஆண்டிலிருந்து மதுரையில் கோளரங்கம் ஒன்று செயல்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரைப் பல்கலைக்கழகம் 40,000 சதுரஅடி ஒதுக்கியுள்ளதாகவும், இந்தியாவிலேயே முதன்முதலில் ஒரு பல்கலைக்கழகத்தில் கோளரங்கம் அமையப்போவது மதுரையில்தான் என்றும் அரசு அறிவித்தது. ஆனால் இத்திட்டம் இதுவரையில் செயல்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

நல்லது செய்கிற ஆட்சியாளர்களைக் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு நல்லது செய்கிற மாவட்ட ஆட்சித் தலைவர்களை ‘தண்ணியில்லா காட்டுக்கு’ அனுப்புவார்கள் என்று பொதுமக்கள் பேசிக்கொள்வார்களே அப்படிப்பட்ட துறையாகத்தான் இந்த அறிவியல் தொழில்நுட்பத் துறையை அரசு வைத்திருக்கிறது என்று சொல்ல வேண்டும் (தற்போது இந்தத் துறையின் அரசுச் செயலாளராக இருப்பவர் சகாயம் ஐ.ஏ.எஸ்).

தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தை மட்டுமல்லாமல் திட்டக் குழுவையும் அரசு இப்படித்தான் வைத்திருக்கிறது. தற்போது தமிழ்நாடு திட்டக் குழுவின் தலைவராக முதல்வரும், செயலாளராக அரசுச் செயலரும் மட்டுமே உள்ளனர். துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படாமல்தான் உள்ளன. இந்தியக் குடியரசை ஆட்சி செய்யும் அரசின் வழியில் தமிழ்நாடு அரசும் திட்டக் குழுவைக் கலைக்கும் எண்ணத்தில் இருக்கிறதோ என்னவோ?

மால்கம் ஆதிசேசய்யா (1910-1994) அவர்களின் நினைவு நாள் (21-11-2017) கட்டுரை.

கட்டுரையாளர் ‘வெள்ளந்தி மனிதர்கள்’ சிறுகதை நூலின் ஆசிரியர்.

திங்கள், 20 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon