மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

செல்வப் பிள்ளையை மீட்டது சரித்திர நிகழ்வே!

 செல்வப் பிள்ளையை மீட்டது சரித்திர நிகழ்வே!

ராமானுஜர் என்ற மகானை, ராமானுஜர் என்ற மனிதரில் சிறந்த யதியை, யதிகளின் ராஜனை, விசிஷ்டாத்வைத வேந்தனை நம்பிக்கை ரீதியாக, குரு பரம்பரை ரீதியாக போற்றுகிறார்கள், வணங்குகிறார்கள். அதேநேரம் ராமானுஜர் பற்றி சொல்லப்படும் சில செய்திகளில் பக்தி இருக்கிறதே தவிர வரலாற்றுச் சான்று இல்லை என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.

ராமானுஜர் மேல்கோட்டையில் இருந்து டெல்லி சென்றார் என்றும், லாகூர் சென்றார் என்றும் அங்கிருந்தே செல்வநாராயணப் பெருமாளை மீட்டு வந்தார் என்றும் பல்வேறு தகவல்கள் இருக்கின்றன. சில ஆய்வாளர்கள் ராமானுஜர் காலத்தில் அப்படிப்பட்ட ஆட்சியே குறிப்பிட்ட அந்தப் பகுதிகளில் நடைபெறவில்லை என்கிறார்கள். இன்னும் சிலரோ ராமானுஜர் செல்வநாராயணன் சிலையை கர்நாடகத்தின் ஏதாவதொரு பகுதியில் இருந்தே மீட்டு வந்திருப்பார் என்கிறார்கள்.

ஆனால் ராமானுஜர் டெல்லி சென்றார், முஸ்லிம் சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருந்துதான் செல்வநாராயணன் மீட்டுக் கொண்டுவரப்பட்டார் என்பதற்கான வரலாற்றுத் தரவுகள் இருக்கின்றன என்று வைணவ உறவுகள் வலிமையான வாதங்களை முன் வைக்கிறார்கள்.

மேல்கோட்டையில் இருந்து டெல்லி பயணம் இல்லை என்றால், இளவரசி இல்லை, இளவரசி இல்லை என்றால் பீவி நாச்சியார் இல்லை, பீவி நாச்சியார் இல்லை என்றால், வர நந்தினி இல்லை., வர நந்தினி இல்லை என்றால் மேல்கோட்டை கோயிலில்...அவள் மூலமாகத்தான் நைவேத்யம் படைக்கப்பட்டு வருகிறது என்று ராமானுஜர் நியமித்து வைத்த நியதியும் இல்லை என்று ஆகிறது.

ஆக ஒரு விஷயத்தை இல்லை என்று சொன்னால், அதோடு தொடர்புடைய பற்பல சம்பவங்களை இல்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால் இவை எல்லாமே நடந்தவைதான், ராமானுஜரைப் பற்றி மிகைப் படுத்திச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை என்பதுதான் மேலும் சிலரின் வாதம்.

அதற்கு அவர்கள் வைக்கும் வாதங்களைத் தொகுத்து, கும்பகோணத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவரான நரசிம்மன் தனது அக்ரஹாரம் என்ற பிளாக்கில் வெளியிட்டுள்ளார். அதை ஒரு பார்வை பார்ப்போமா?

’’ ஸ்ரீ ராமானுஜரின் காலம் (பொது ஆண்டுக்கு பின் அதாவது (கிபி)1013- 1137). ஸ்ரீ ராமானுஜர் அவதாரகாலத்தினை பற்றி எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

கஜினி படையெடுப்பு கி.பி. 1001 பஞ்சாபில் ஜயபாலனை வென்றது. (the oxford history of India by win cat A.Smith Cie 1921) 1019 கானோஜ் பிடிபட்டது 1024 – 25ல் சோம்நாத் சிவன் கோயில் இடிக்கப்படுகிறது, 1030 கஜினி இறந்துவிடுகிறான். அதன் பின் முதல் மசூத் (1030-41) முகமது (1041), மதூத் 1041-1048, இரண்டாம் மசூத் (1048), அலி (1048-1049), அப்துல் ரஜீத் 1049-52), தோகுமூல் 1052-53, பரூக் ஜாத் 1053-59, இப்ராஹீம் 1059-1099, மூன்றாம் மசூத் (1099- 1115) மூன்றாம் மசூத் தலைநகர் லாகூர், மூன்றாம் மசூத்தின் பெண்ணின் பெயர் பீவி.

1097-1100 காலத்தில் டெல்லியை உள்ளடக்கிய கசானாவிட் முஸ்லீம்கள் ஆட்சி கீழ் வந்துவிட்டது. ஸ்ரீ ராமானுஜம் பத்திரிகையில் என். ஜீயபங்கார் தந்த தகவலினை Wikipedia Ghazanavit என பதிவுசெய்தால் உறுதி செய்கிறது.

எனவே, டெல்லியில் முஸ்லிம் சுல்தான்களின் ஆட்சி ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் இல்லை என மறுப்பவர்களின் கருத்து உடைபடுகிறது. ஸ்ரீ வைஷ்ணவ குருபரம்பரையில் உள்ள தகவல் உண்மையே, சரித்திரபூர்வமானதே. ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் டெல்லி சுல்தான்களின் ஆட்சியில்தான் இருந்தது. 1097 க்கு முன், முஸ்லீம்களின் படையெடுப்பு மைசூர் வரை வந்து சென்றதை தொண்டனூர் கல்வெட்டு ஆதாரத்துடன் காட்டுகிறது. (The life of Ramanuja by A. Govindacharya) இஸ்லாமிய படையெடுப்பில் திருநாராயணபுரம் பெருமாள் திருமேனி கொள்ளையடிக்கப்பட்டதும், பின் பெருமாள் விக்ரஹம் மூன்றாம் மசூத் அரண்மனையில் அவனது பெண் பீபியின் அன்புக்கு ஆளானதும் உடையவர் பெருமாள் விக்ரஹத்தினை மீட்டெடுக்க சென்றதும் வரலாறு’’

என மிகத் தெளிவான வரலாற்று வரையறைகளை முன் வைக்கிறார் நரசிம்மன்.

ஆக ராமானுஜர் என்ற ஆளுமையை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து நாள், நட்சத்திரம் என்ற மிகத் துல்லியமான தரவுகளோடு அமைந்திருக்கும் குருபரம்பரை மீதான நம்பகத் தன்மை மேலும் கூடுகிறது.

இன்னும் சொல்லப் போனால் ராமானுஜரை சரண் புகுந்தவர்களுக்கு அவரைப் பற்றிய மிகையான தகவல்களை அடுக்கி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால்தான் அவர்கள் குருபரம்பரையை ஒட்டியே தங்கள் கூற்றுகளை முன் வைக்கிறார்கள்.

ராமானுஜர் காஷ்மீரத்தில் இருந்து திரும்பும்போது எந்தெந்த வழியாக வந்தார் என்பதையெல்லாம் குருபரம்பரைக் குறிப்பிடுகிறது.

ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைமையேற்றிருக்கும் வைணவச் செம்மல் ஜெகத்ரட்சகன் அவர்கள் தன்னை ஆழ்வார்களின் அடியாராகவே வெளிப்படுத்தி வைணவத் தொண்டாற்றி வருகிறார். அவரது உரையின் ஒவ்வொரு மூலக் கூறிலும் மாலின் மீது ஆழ்வார்கள் மீதும் ராமானுஜர் மீதும் அவர் கொண்ட பக்திநயம் பாயும்.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon