மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

இந்திரஜித்: செம்பருதியின் தெய்வீக நிலை!

 இந்திரஜித்: செம்பருதியின் தெய்வீக நிலை!

நான் இந்திரஜித் படத்தின் மியூசிக் டைரக்டர் கே.பி. எப்படியும் முழு பேரைச் சொன்னா ஞாபகத்துல இருக்காதுங்குறதால, கே.பி அப்படின்னே என்னை மாத்திக்கிட்டேன். ஸ்கூல், காலேஜ் நாட்கள்ல மியூசிகலா நிறைய வொர்க் பண்ணிருந்தாலும் என் தொழிலா வேற விஷயங்கள் இருக்கணும்னு அக்கவுண்ட்ஸ், சமையல் கலை எல்லாம் படிச்சேன். உணர்வுப்பூர்வமான ஆர்வம் ஒரு பக்கமும்(Passion), தொழில்முறை படிப்பு(profession) ஒருபக்கமும்னு இருந்தப்ப இதை ஏன் இரண்டா பிரிச்சு மதில்சுவர் மேல நடக்கணும்னு யோசிச்சு முழுசா என்னை மியூசிக்குக்குள்ள கொண்டுவந்தேன். அப்ப நான் சேர்ந்த இடம் தேவி ஸ்ரீ பிரசாத். கீபோர்டு பிளேயரா அவர்கூட நிறைய படங்கள் வொர்க் பண்ணதுக்கு அப்பறம் கலா பிரபு சார் கூட பழக்கம் உண்டாச்சு.

இசை சம்மந்தமா நானும் கலா பிரபு சாரும் நிறைய பேசுனோம். திடீர்னு ஒருநாள் ‘எல்லாம் ஓகே கே.பி. நீங்களே படத்துக்கு மியூசிக் பண்ணிடுங்க’ன்னு அவர் சொன்னது உண்மையா அப்படின்னு இன்னும் சந்தேகமாவே இருக்கு. எனக்கு கொடுக்கப்பட்ட இந்த ஆச்சர்யத்துக்கு ஈகுவலா நான் கொடுத்தது செம்பருதி பாட்டு.

படத்துல முதல் பாடலா வந்தாலும், இதை லேட்டா தான் கம்போஸ் பண்ணோம். மற்ற பாடல்களை பார்த்ததுக்கு அப்பறம் ஒரு டிரெடிஷனல் பாட்டு பண்ணா என்னன்னு தோணுச்சு. அப்ப கர்நாடக இசையையும், இந்துஸ்தானி இசையையும் கலந்து ஒரு பாட்டு பண்ணலாம்னு பண்ணோம். ஆரம்பத்துல ஒரு லெவல்ல இருந்த அந்த பாட்டு ஒவ்வொரு கட்டத்துலயும் அடுத்தடுத்த கட்டத்துக்கு வந்தது. ஒரு வெர்ஷன் கொண்டுபோய் கலாபிரபு & தாணு சார் கிட்ட கொடுத்தேன். பாட்டைக் கேட்டுட்டு அற்புதமா வந்திருக்கிறதா சொன்னாங்க, ஆனா ஒரு மாற்றம் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. நாங்க பண்ண வெர்ஷன் சமஸ்கிருத வரிகள் இருந்தது. அதுக்கு பதிலா தமிழ் வரிகள் இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னாங்க. தமிழ்ல படம் பண்றோம். தமிழ் ரசிகர்கள் பார்ப்பாங்க. அவங்களுக்கு புரியாம ஒரு பாட்டு எப்படின்னு கேட்டாங்க. அப்பதான் இதை தமிழ்ல எழுத யார் இருக்கான்னு தேடினோம். எங்களுக்கு கிடைச்சவர் புலவர் புலமைப்பித்தன்.

சொன்னா நம்பமுடியாது. இந்தமாதிரி பாடல் வரிகளை மாற்றும்போது சவுண்ட்லயும் அங்கங்க கை வைக்கவேண்டியது வரும். ஆனா, ஒரு இடத்துலகூட சுருதியை இறக்கவேண்டிய அவசியமோ, வார்த்தைகளை வெட்டவேண்டிய அவசியமோ இல்லாமல் ஒரு பாடலை புலமைப்பித்தன் எழுதிக் கொடுத்தார். மேல சொன்னது போலவே இந்த வரிகள் மூலமா இந்த பாட்டு அடுத்தகட்டத்துக்கு போய்கிட்டு இருந்தது தெரிஞ்சுது. அவருடைய வரிகளை பாடிப் பார்த்தபோது ஒரு தெய்வீக நிலைக்கும், சாதாரண பாடலுக்கும் இடையில் அது நின்னுக்கிட்டு இருந்தது தெரிஞ்சதும் எந்தவித தாமதமும் இல்லாம, பாம்பே ஜெயஸ்ரீ மேடம்கிட்ட பேசி அவங்களை பாட வெச்சோம். அப்ப தான் இந்தப்பாட்டுக்கு இப்படியொரு தெய்வீக நிலை கிடைச்சது. பாம்பே ஜெயஸ்ரீ கூட இந்த இசையை எந்தவிதத்துலயும் மாத்தணும்னு நினைக்கல. ரொம்ப ஆர்வமா எந்த இடத்துல ஏறணும், எந்த இடத்துல ஆலாபனைகள் எங்க வரணும்னு அவங்களே சொல்லி பாடிக்கொடுத்தது ஒரு முதல்பட இயக்குநருக்கு எந்த மாதிரியான உணர்வைக் கொடுத்திருக்கும்னு வார்த்தைகளால சொல்லமுடியாது.

ஒரு பாட்டை தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகி இப்படி பலபேர் பல கட்டத்துக்கு கொண்டுபோன மாதிரி செம்பருதி பாட்டின் இசையை அடிப்படையா எடுத்துக்கிட்டு படத்துக்கான பின்னணி இசை & இந்திரஜித் தீம் பாடல் இதையெல்லாம் டிசைன் பண்ணிருக்கேன். வழக்கமா ஹாலிவுட்ல இந்தமாதிரியான முயற்சி இருக்கும். படத்துக்கான உயிர்நாடியா ஒரு இசையா எடுத்துக்கிட்டு அதைப் பல்வேறு சூழலுக்கும் ஏற்ற மாதிரியான இசையா மாத்துறது. செம்பருதி பாட்டு ஒரு கட்டத்துல வரும், இந்திரஜித் தீம் பாடல் ஒரு இடத்துலயும், காட்டுக்குள்ள போகும்போது காட்டுவாசிகளின் மொழியை சேர்த்தும் ஒரு இசைல இருந்து பல இசையைப் பிரிச்சு எடுத்திருக்கோம். அதெல்லாம் நடந்தது எப்படி? இதை நாளைக்கு பார்ப்போம்.

விளம்பர பகுதி

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon