மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா?

தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியா?

புதுவைத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பாணியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது, தமிழக அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநரான கிரண் பேடிக்கும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குமிடையே கடும் பனிப்போர் நிலவிவருகிறது. வளர்ச்சிப் பணிகளுக்கு ஆளுநர் தகுந்த ஒத்துழைப்பு தருவதில்லை என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டிவருகின்றனர். ஆளுநரும் முழு அதிகாரத்தையும் தன் கையில் எடுத்துக்கொண்டு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.

இந்த சூழ்நிலையில் டெல்லி, புதுச்சேரி ஆளுநர்களின் பாணியைப் பின்பற்றியுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால், கோவையில் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று ( நவம்பர் 14) பாரதியார் பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகக் கோவை சென்ற ஆளுநர், அங்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்தால் மட்டுமே அங்கு ஆளுநர் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவர். மற்ற சமயங்களில் ஆளுநர்கள் அரசின் நடவடிக்கைகளில் தலையிட மாட்டார்கள். எனவே, இந்த ஆலோசனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளைத் தங்கள் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக மத்திய பாஜக அரசின் மீது ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில், இந்தச் சம்பவம் அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.

இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், "ஆளுநரின் இந்த நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் இதுவரை ஆளுநர் தலையிட்டதில்லை" என்று தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனோ, "ஆளுநர் ஆலோசனையில் ஈடுபட்டதை வரம்பு மீறிய செயலாக எடுத்துக்கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தத் தேவையில்லை. தனது அதிகார வரம்புக்கு உட்பட்டுதான் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று ஆளுநருக்குத் தெரியும். ஆளுநருக்கு ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூற முடியாது" என்றுள்ளார்.

ஏற்கனவே தமிழக அதிமுக அரசை மத்தியில் ஆளும் பாஜக அரசு பின்னின்று இயக்குவதாகக் கூறப்பட்டுவரும் நிலையில், ஆளுநரின் இந்த நடவடிக்கையால் மத்திய அரசு ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் அமல்படுத்த முயற்சிக்கிறதா என்ற சந்தேகத்தையும் அரசியல் வட்டாரங்களில் எழுப்பியுள்ளது.

ஆலோசனை நடைபெறும்போது அமைச்சர் வேலுமணி வேகமாக உள்ளே சென்று கலந்து கொண்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்," முதல்வர் கூறியதன்பேரில் தான் நான் இங்கு வந்து ஆலோசனையில் கலந்து கொண்டேன். ஆளுநர் ஆய்வுக் கூட்டம் நடத்தியது ஆரோக்கியமான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆளுநர் ஆலோசனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர், சுயாட்சியில் ஆளுநர் தலையிடுவதாக கூறி, ஆலோசனை நடத்த குமணன் இல்லம் முன்பு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon