மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

உணவகங்கள்: வரிக் குறைப்புக்கு வரவேற்பு!

உணவகங்கள்: வரிக் குறைப்புக்கு வரவேற்பு!

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் ஏசி வசதி கொண்ட உணவகங்களுக்கு 18 சதவிகித வரியும், ஏசி வசதியல்லாத உணவகங்களுக்கு 12 சதவிகித வரியும் விதிக்கப்பட்டது. இந்த வரி விகிதங்களைக் குறைக்குமாறு உணவக உரிமையாளர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. நவம்பர் 10ஆம் தேதியன்று கவுகாத்தியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஏசி வசதியுள்ள உணவகங்கள், ஏசி வசதியல்லாத நிறுவனங்கள் என அனைத்து உணவகங்களுக்குமான வரி விகிதம் 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை மதிப்பீட்டு ஆய்வு நிறுவனமான இக்ரா வரவேற்றுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் நடவடிக்கை சிறப்பானது என்றும், இதனால் உணவகங்களில் உணவு அருந்துவதற்கு ஏற்படும் செலவுகள் குறையும் எனவும் இக்ரா கூறியுள்ளது. இக்ரா நிறுவனத்தின் துணைத் தலைவரான பவித்ரா பொன்னையா பேசுகையில், “திருத்தியமைக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நன்மை பயக்கக்கூடியவை. ஏனெனில் இதனால் உணவகங்களில் உணவு அருந்துவதற்கான செலவுகள் குறைவதோடு, வளர்ச்சி பெறாமல் தவிக்கும் அமைப்பு சார்ந்த உணவகங்களின் வருவாயும் அதிகரிக்கும்” என்று கூறினார்.

ஜிஎஸ்டி கவுன்சில் மேற்கொண்டுள்ள திருத்தங்களின் படி, ஒரு நாளைக்கு 7,500 ரூபாயோ அதற்கு மேலான தொகையோ வசூலிக்கும் நட்சத்திர உணவு விடுதிகளுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்படும். இவ்வகை விடுதிகள் உள்ளீட்டு வரிக் கடன் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. 7,500 ரூபாய்க்கும் குறைவான தொகை வசூலிக்கும் அனைத்து உணவு விடுதிகளுக்கும் 5 சதவிகித வரி விதிக்கப்படும். ஆனால் இவ்வகை உணவு விடுதிகளுக்கு உள்ளீட்டு வரிக் கடன் வழங்கப்படாது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon