மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ஜல்லிக்கட்டிற்காகப் போராடிய காவலர் மீது நடவடிக்கை!

ஜல்லிக்கட்டிற்காகப் போராடிய காவலர் மீது நடவடிக்கை!

ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகம் உள்ளவரை நினைவுகூரும் அளவிற்குக் கடந்த ஜனவரி மாதத்தில் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் மிகுந்த எழுச்சியோடு நடந்தது. இளைஞர்களின் போராட்டத்திற்கு வெற்றியும் கிட்டியது. இந்தப் போராட்டத்தில் ஆயுதப் படை காவலர் மாயழகு திடீரென்று பங்கெடுத்தார். போலீஸ் சீருடையிலேயே போராட்டத்தில் பங்கேற்றதால் போராட்டக் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது.

மாயழகு, போலீஸ் சீருடையிலேயே மைக் பிடித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயத்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார். அப்போது பேசிய அவர், “இது ஒரு துவக்கம்தான், இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல் துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது. தமிழர்களுக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. முன்வைத்த காலைப் பின் வைக்க மாட்டார்கள். இது நியாயமான போராட்டம். நான் பேசுவதைப் பல காவலர்கள் பேச வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று கூறினார்.

இதையடுத்து காவல் துறையினர் அவரை வலுக்கட்டாயமாகப் போராட்ட களத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன் பிறகு காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அப்போது தகவல் வெளியானது. இதையடுத்து தன் முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார் அவர். அதில் அவர், “என் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பல தகவல்கள் வெளியாகின்றன. இந்தத் தகவல் பொய்யானது என்பதைத் தெரிவிக்கவே நான் இந்த வீடியோவை வெளியிடுகின்றேன். என் மீது எந்த நடவடிக்கையும் காவல் துறை எடுக்கவில்லை. பணிக்குத் திரும்பும் படி எனக்கு அழைப்பு வந்துள்ளது. மேலும், எனக்குத் தனியார் நிறுவனங்கள் சில நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் காவல் துறையில் பணியாற்றுவதே என் லட்சியம்” என்று கூறினார்.

ஆனால், கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் காவலர் மாயழகு மீது தற்போது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை முடியும்வரை ஆயுதப் படை காவலர் மாயழகுக்குப் பதவி, ஊதிய உயர்வு கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “காவல் துறைக்கு மாயழகுவின் செயல் குறித்து மிகுந்த அதிருப்தி இருந்தது. ஆனால் அவர் மீது தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று ஆளும் தரப்பில் கூறப்பட்டது. தற்போது இளைஞர்களின் வேகம் தணிந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon