மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ரஞ்சித் Vs கோபி: முடிவுக்கு வரும் சர்ச்சை!

ரஞ்சித் Vs கோபி: முடிவுக்கு வரும் சர்ச்சை!

அறம் படத்தைப் பாராட்டி இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியால் உருவான சர்ச்சையின் வேகத்தைத் தணிக்கும் விதமாக அறம் பட இயக்குநர் கோபி நயினாரே முன்முயற்சி எடுத்துள்ளார்.

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளிவந்த படம் அறம். சமூகப் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் திரைத்துறையினர் மத்தியிலும் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.

இயக்குநர் பா.ரஞ்சித் படத்தைப் பாராட்டித் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றினை பதிவிட்டார். அதில் அவர், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி... கற்பி ஒன்றுசேர் போராடு... இயக்குநர் & படக் குழுவினருக்கும், தோழர் நயன்தாரா அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்” என்று கூறியிருந்தார்.

அந்தப் பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. நயன்தாராவைத் தோழர் என்று குறிப்பிட்டுள்ள ரஞ்சித், இயக்குநர் கோபியின் பெயர் குறிப்பிட்டு பாராட்டாதது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

ரஞ்சித்தின் மெட்ராஸ் படக் கதை திருட்டு பிரச்சினையில் இவர்கள் இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடுதான் ரஞ்சித் கோபியின் பெயரைக் குறிப்பிடாததற்குக் காரணம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோபி இயக்கிய கறுப்பர் நகரம் படம் 40 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தயாரிப்பு பிரச்சினை காரணமாக முழுமையடையாமல் நின்றுபோனது. 'கல்லூரி' படத்தில் நடித்த அகில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அருந்ததி நடித்திருந்தார். இதன் பிறகு ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' திரைப்படம் வெளியானது. கார்த்தி, கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியான அந்த படம் கறுப்பர் நகரம் கதையை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறப்பட்டது.

அந்த பிரச்சினையை மனதில் கொண்டே ரஞ்சித் கோபியின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று ரஞ்சித்துக்கு எதிராக கடுமையான விமர்சன கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

கடந்த இரு நாட்களாக பெரும் விவாதப்பொருளாக மாறிவரும் இந்த விவகாரம் குறித்து இயக்குநர் கோபி நயினார் முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், “இயக்குநர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்கள். ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் ரஞ்சித் அவர்களுக்கு தங்கள் கருத்துகளை பதிவுசெய்துவருகின்றனர். இது ஆரோக்கியமான சூழலல்ல” என்று கூறியுள்ளார்.

மேலும் அதில், “தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன். நானும், இயக்குநர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்துச் செயல்பட வேண்டியது கட்டாயமும்கூட. அப்போது தான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமையக்கூடும். ஆதலால் உறவுகளைச் சிக்கலாக்குகின்ற எந்தவொரு பதிவைம் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தத்தை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்து குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் இதுவரையில் எந்த கருத்தும் கூறவில்லை. இதுகுறித்து கேட்க அவரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சித்தும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon