மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

சாலை மேம்பாட்டுக்கு 1 லட்சம் கோடி!

சாலை மேம்பாட்டுக்கு 1 லட்சம் கோடி!

கிராமப் புறச் சாலைகளை மேம்படுத்துவதற்கும் புதிய சாலைகளை அமைப்பதற்கும் மத்திய அரசும் மாநில அரசுகளும் சுமார் ரூ.1 லட்சம் கோடியைச் செலவிடவுள்ளன.

இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் கிராமப் புறங்களுக்குப் போதிய சாலை வசதிகளை ஏற்படுத்தித் தரும் வகையில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட திட்டந்தான் ‘பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா’ திட்டம். இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இந்த நிதியாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கிவிட்டன. இத்திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ.90,000 கோடியைச் செலவிட மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மேற்கூறிய தொகையில் மத்திய மற்றும் மாநில அரசுகளும் 60 : 40 என்ற விகிதத்தில் செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக ரூ.11,000 கோடியை தீவிரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்காக மத்திய அரசு செலவிடுகிறது.

2017-18 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்திற்காக ரூ.19,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல, மாநில அரசுகள் சார்பில் ரூ.10,000 கோடி செலவிடப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் இதேபோலச் செலவிடப்பட்டால் சாலையமைப்புப் பணிகளுக்காக சுமார் ரூ.90,000 கோடி செலவாகும். 2017-18 நிதியாண்டில் கிராமப் புறங்களில் 59,000 கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை அமைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்குச் சராசரியாக 150 கிலோ மீட்டர் அளவு சாலையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக 2016-17 நிதியாண்டில் 48,812 கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 47,500 கிலோ மீட்டர் அளவிலான சாலைகளை மட்டுமே மத்திய அரசால் அமைக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon