மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

மரு ஏற்படுவதற்கான காரணம்!

மரு ஏற்படுவதற்கான காரணம்!

நம் உடலில் கொப்பளம் தோன்றும், மறையும். ஆனால் சிலருக்கு மரு உடலில் மறையாமல் அப்படியே இருக்கும். கை, கால், தலை என உடலில் மரு ஏற்படுவதற்க்கான காரணங்களை விளக்குகிறார், தோல்நோய் சிறப்பு நிபுணர் ரேவதி தினேஷ்.

மருவை, ‘உன்னி மரு’, ‘பால் மரு’, ‘பரம்பரை மரு’ என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். உன்னி மருவும் பால் மருவும் வைரஸ் கிருமிகளால் வரக்கூடியவை. உன்னி மரு, உடலில் கை, கால் மற்றும் தலை போன்ற இடங்களில் முதலில் ஒன்று அல்லது இரண்டு தோன்றும். பிறகு, எல்லா இடங்களிலும் பரவும். இந்த இருவகை மருக்களும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவக்கூடியவை.

உன்னி மரு, தண்ணீரில் பரவக்கூடியத் தன்மை உடையது. ஒன்று அல்லது இரண்டு மருக்கள் கை, கால்களில் இருந்தால், தோல் மருத்துவரிடம் சென்று, இந்த மருவுக்குச் சரியான களிம்பை வாங்கிப் போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், மரு சுருங்கிவிடும். முகத்தில் மரு இருந்தால், அதற்குக் களிம்பு போடக் கூடாது. லேசர் சிகிச்சை மூலம் மருவை அகற்றிக்கொள்ளலாம். பரம்பரை மரு (டி.பி.என்.) என்பது ஆசனவாய், பிறப்புறுப்புகளில் வரக்கூடியது. பரம்பரை மரு என்று பெயர் இருந்தாலும், இது பெற்றோரிடமிருந்து வருவது என்ற அர்த்தம் இல்லை.

நிறைய மருக்கள் இருந்தால், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, உன்னி மருவும் பால் மருவும் உடலில் வேகமாகப் பரவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கு சர்க்கரை நோய், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் எனப் பல காரணங்கள் இருக்கலாம்.

நமது உடலில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மரு ஏற்படும்போதே முறையான சிகிச்சை மேற்கொண்டு அகற்றிவிட வேண்டும். எந்த வகையான மரு ஏற்பட்டுள்ளது எனப் பரிசோதனை செய்து சரிசெய்ய வேண்டும்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon