மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

விவசாயிகள் போராட்டம்: கமல் ஆதரவு!

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, கட்சிகளை கடந்து விவசாயிகள் கூட வேண்டும் என்று குறிப்பிட்டு நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராகவும், சமூக பிரச்சினைகள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கள் தெரிவித்துவருகிறார். இதற்கு எதிர்வினையாற்றிய அமைச்சர்கள், கமல் ஆதாரபூர்வமாகக் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

அரசியலுக்கு வரப்போவதாகச் சில மாதங்களாகத் தெரிவித்துவந்த கமல்ஹாசன், சில வாரங்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகத்தில் ஆய்வுசெய்து மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து அடையாரில் நடைபெற்ற விவசாய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், நான் உழவனின் மகன் அல்ல, மருமகன் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவது உறுதி என்றும், ஆனால் ஒரு படத்தை அறிவிக்கவே மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்வேன் என்றார். கமல்ஹாசன் கட்சியின் சின்னம் விசில் என்றும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்று (நவம்பர் 14) கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்" என்று பதிவிட்டுள்ளார்.

வரும் 20ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள விவசாயிகள் பேரணிக்கு ஆதரவாகவே கமல் இந்தக் கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon