மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ஜப்பானை மிஞ்சும் இந்தியப் பொருளாதாரம்!

ஜப்பானை மிஞ்சும் இந்தியப் பொருளாதாரம்!

இன்னும் பத்து ஆண்டுகளுக்குள் பொருளாதார வளர்ச்சியில் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மெரில் லிஞ்ச் நிதி நிறுவனம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்து தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ’அதிக வருமானம், நிதிச் சேவைகளில் முதிர்வு போன்ற காரணங்களாலும், பிற நாடுகளைச் சாராமல் செயல்படும் தன்மையாலும் இந்தியா 2019ஆம் ஆண்டுக்குள் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும். மேலும், 2028ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறும், அடுத்த பத்து ஆண்டுகளில் சராசரியாக 10 சதவிகித வளர்ச்சியை இந்தியா பதிவு செய்யும்.

இந்தியாவின் இந்த வளர்ச்சிக்கு மூன்று முக்கியக் காரணிகள் பின்புலமாக உள்ளன. ஒன்று, பிற நாடுகளைச் சார்ந்திராமல் சுதந்திரமாகச் செயல்படுவது; இரண்டாவது, நிதிச் சேவைகளில் தாராளமயமாக்கல் மற்றும் வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பது; மூன்றாவது, அதிகரித்துவரும் வருமானம். இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 7 சதவிகித வளர்ச்சி இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தமாக 5.7 சதவிகிதமாக இருந்தது. பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி அதனைத் தொடர்ந்த காலாண்டில் ஓரளவுக்குச் சீராகியுள்ளது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon