மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கடனை விற்கும் வங்கிகள்: விவசாயி பலி பின்னணி!

கடனை விற்கும் வங்கிகள்:  விவசாயி பலி பின்னணி!

வங்கியில் டிராக்டர் கடன் வாங்கிய விவசாயியிடம் கடன் வசூலிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில், விவசாயி இறந்துபோன விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம், மத்திய மாநில அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம், போந்தை கிராமத்தில் வசிக்கும் ஞானசேகரன், ஸ்டேட் பேங்கில் டிராக்டர் கடன் வாங்கியிருந்தார். அவர் வாங்கிய கடனை வங்கி அனுப்பிய தனியார் படையினர் சென்றபோது ஏற்பட்ட மோதலில் விவசாயி கீழே விழுந்தார். மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

தேசிய வங்கிகளிலும், தனியார் வங்கிகளிலும் கடன் வசூல் செய்வதற்கு குண்டர்கள் அனுப்பி அடித்து துவைப்பது ஏன் என்று, ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியிடம் விளக்கம் கேட்டோம்.

’’கொடுத்தக் கடன்களை, வங்கி ஊழியர்கள்தான் வசூல் செய்யவேண்டும், இப்போது அப்படியில்லை. வராகடன்களை வங்கி பேலன்ஸ் ஷீட்டில் காட்டவேண்டாம் என்று ரிசர்வு வங்கி உத்தரவு. அதனால் அந்தக் கடனை தனியார் கம்பெனியிடம் விற்கசொல்லிட்டார்கள்.

ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி, (அசட் ரெக்கவரி கம்பெனி)யிடம், பத்து லட்சத்துக்கு குறைவான வாராக் கடன்களை இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி போன்ற வங்கிகள் விற்பனை செய்துவருகிறார்கள்’’ என்றவரிடம்,

‘’கடன் விற்பனை என்றால் என்ன?” என்று கேட்டோம்.

‘’பத்து லட்சம் கடன் வாங்கி, வட்டியுடன் 12 லட்சம் உயர்ந்திருக்கும், அதை வங்கியால் வசூலிக்கமுடியாது, வராக்கடன் என்று வங்கி பேலன்ஸ் ஷீட்டில் காட்டவும்கூடாது. அதனால் ரிலையன்ஸ் ஏ.ஆர்.சி,யிடம், 50%, 60% சதவீதம் வாங்கிக்கொண்டு, அவர்களிடம் ஒப்படைத்துவிடுவோம். அதாவது கடனை விற்பனை செய்துவிடுவோம். அவர்கள் நினைத்துபோல் மிரட்டி அதிகமாக வசூல் செய்து கொள்வார்கள்.

வங்கி கடன்களை வசூலிக்க தனியாரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு விட்டதால்தான், இன்று விவசாயிகள் வரிசையாக மரணமாக காரணம்’’ என்றார்.

விவசாயி ஞானசேகரன் மரணத்துக்கு நீதி கேட்டு, சென்னை உயர் நீதிமன்றம் படியேறினார்கள், ஞானசேகரன் குடும்பத்தார்.

இந்நிலையில் இதுபோன்ற கடன்களை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகள் துன்புறுத்தப்படுவதும், தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களை தடுக்கும் வகையில், வங்கிகடன்கள் வசூலிப்பதில் புதிய விதிகள் அமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் வழக்கறிஞர் ரஜினிகாந்த்.

வழக்கு நவம்பர் 13ம் தேதி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுந்தர் நீதிபதிகள் அடங்கிய அமர்வு பெஞ்ச் விசாரித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon