மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

24 மணிநேரம் பரவலாக மழை நீடிக்கும்!

24 மணிநேரம் பரவலாக மழை நீடிக்கும்!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று (நவம்பர் 14) ஒருநாள் மட்டும் மழை பெய்யும். நாளை (நவம்பர் 15) முதல் மழை படிப்படியாகக் குறையும் எனத் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (நவம்பர் 13) பகலில் காற்றுடன் பெய்யத் தொடங்கிய மழை இடையிடையே பலமாகக் கொட்டியது. விடியவிடிய இடைவிடாமல் மழை நீடித்தது. காலையிலும் மழை தொடர்ந்து பெய்தது. நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "தற்போது நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியிலிருந்து சென்னைக்கு மழை கிடைப்பது இன்றே கடைசி நாள். ஏனெனில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகரத் தொடங்கிவிட்டது.

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நகர்வதன் காரணமாக, ராமநாதபுரம் பகுதியில் மழை இருந்தது. இன்று இதே சூழல் இருப்பதால், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை இருக்கும்.

சென்னையில் இன்று இரவு முழுவதும் அவ்வப்போது மழை இடைவெளி விட்டுப் பெய்யும். ஒரு சிலநேரங்களில், ஒருசில பகுதிகளில் மட்டும் கனமழையும் பெய்யக்கூடும். மேலும் இந்த ஆண்டிலேயே இன்று மிகவும் குளிர்ச்சியான நாளாக இருக்க வாய்ப்புள்ளது. தற்போது வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்றளவிலேயே இருக்கிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon