மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கறுப்புப் பணத்தைக் கண்டறியவே சோதனை!

 கறுப்புப் பணத்தைக் கண்டறியவே சோதனை!

சசிகலா உறவினர் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனையில் பாஜகவின் பங்கு எதுவுமில்லை என்றிருக்கிறார் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

கடந்த ஐந்து நாட்களாக, சசிகலா உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்தது. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார் அதிமுவைச் சேர்ந்த டிடிவி தினகரன்.

இந்த சோதனைக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று தமிழக அமைச்சர்கள் தெரிவித்தனர். ஆனால், இதில் மத்திய அரசின் தூண்டுதல் இருப்பதாக, எதிர்கட்சியினர் இந்த நடவடிக்கையை விமர்சித்தனர்.

இதுபற்றிய கேள்விகளை, செல்லுமிடம் தோறும் சந்தித்து வருகிறார் தமிழகத்தின் சார்பாக பாஜக அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். நேற்று திருச்சியில் இதுபற்றி பேசினார். இன்று நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும், மீண்டுமொருமுறை இதுபற்றி விளக்கமளித்தார்.

”வருமான வரித்துறை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. எங்கு சோதனை நடத்த வேண்டுமென்றாலும், அவர்கள் திட்டமிட்டுச் செயல்படுவார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவுமில்லை.

கறுப்புப் பணத்தைக் கண்டறியவே இந்த சோதனை நட்த்தப்பட்டுள்ளது.

இதில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்து சொல்லமுடியாது. இந்த சோதனைக்கு தமிழக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு வட்டத்திற்குள் இருந்து யாரும் கருத்து சொல்லக்கூடாது” என்றார்.

அதன்பின் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தவர், ‘அதிமுகவை வெளியில் இருந்து வந்து யாரும் அழிக்க வேண்டியதில்லை. அக்கட்சியை அவர்களே அழித்துவிடுவார்கள்’ என்றார்.

மத்திய அரசுடன் உரசல் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் தமிழக அமைச்சர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்களோ?!

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon