மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

அலுவலகம் செல்பவர்களில் 40 % பேருக்கு நீரிழிவு நோய்!

அலுவலகம் செல்பவர்களில் 40 % பேருக்கு நீரிழிவு நோய்!

சென்னையில் அலுவலக பணிகளுக்கு செல்லும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் 2ஆவது ரக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் ‘டயாபடீஸ்’ என்ற நீரிழிவு நோயினால் பல கோடி மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை நீரிழிவு நோய் மிகப் பெரிய உடல்நல பிரச்சினையாக உள்ளது. இந்தியாவில் 6 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் வாழும் நாடுகளில் 2-ஆவது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது.

இன்று (நவம்பர் 14) சர்வதேச ‘நீரிழிவு நோய் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி சென்னையில் நீரிழிவு நோயாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சென்னையைப் பொறுத்தவரை அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் 2ஆவது ரக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீரிழிவு நோயைக் கண்டறிய ‘எச்பி.ஏ.சி’ என்ற பரிசோதனை மூலம் 3 மாத காலம் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கண்டறிய முடியும். மன அழுத்தம் காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

2ஆவது ரக நீரிழிவு நோய்க்கு மன அழுத்தமே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால்தான் அலுவலகங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உலக அளவில் 199 மில்லியன் பெண்கள் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 2040ஆம் ஆண்டில் இது 313 மில்லியனாக இருக்கும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் உள்ளோருக்கு 10 சதவிகிதம் கூடுதலாக மாரடைப்பு ஏற்படுகிறது. இந்நோயால் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படுவதும், குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்துவருகிறது.

நீரிழிவினால் கண் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய் கண் விழித்திரையை அழித்துப் பார்வையை பறிக்கிறது. இந்தியாவில் இத்தகைய நோயினால் 21.7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோயைத் தொடக்க காலத்திலேயே கண்டுபிடித்தால் கண்பார்வை பறிபோவதைத் தடுக்க முடியும். உயர் ரத்த அழுத்தம், அதிக உடல் எடை, சிகரெட் பிடிப்பது, ரத்தசோகை, சிறுநீரக பாதிப்பு போன்ற நோய்களும் நீரிழிவினால் ஏற்படுகின்றன. எனவே உடல் பரிசோதனை அவசியம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon