மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

திருப்பத்தூர் : பள்ளி மாணவனுக்கு தீ வைப்பு!

திருப்பத்தூர் : பள்ளி மாணவனுக்கு தீ வைப்பு!

பள்ளி மாணவனைக் கடத்தி அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஜோன்றம்பள்ளியைச் சேர்ந்தவர் 13 வயதான கோவிந்தன். இவர் திருப்பத்தூர் வெங்களாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவருகிறார். இவரது பெற்றோர்களான செல்வியும் முருகனும் கடந்த பத்து வருடங்களாகப் பிரிந்து வாழ்கிறார்கள்.

கோவிந்தன் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். இன்று (14.11.2017) காலை வழக்கம்போலப் பள்ளிக்குத் தன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்திருக்கிறார். அவர் ஜோன்ரம்பள்ளி அருகே சென்றபோது முகமூடி அணிந்த இருவர் மோட்டார் சைக்கிளில் கடத்தியிருக்கிறார்கள். அவரை அந்தப் பகுதியில் உள்ள நேதாஜி நகர் மாந்தோப்பிற்குக் கடத்திச் சென்றிருக்கிறார்கள். அங்கே தயாராக வைத்திருந்த பெட்ரோலை கோவிந்தன் உடலில் ஊற்றித் தீயைப் பற்ற வைத்திருக்கிறார்கள். பற்றி எரிந்த கோவிந்தன் வலி முடியாமல் கதறித் துடித்திருக்கிறார். கோவிந்தனின் அலறலைக் கேட்ட பொதுமக்கள் அங்கு ஓடிவந்திருக்கிறார்கள். இதனைக் கண்ட முகமூடி நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பியோடிவிட்டார்கள்.

பொதுமக்கள் ஆம்புலன்ஸை வரழைத்து கோவிந்தனை திருப்பத்தூர் மருத்துவனையில் சேர்த்திருக்கிறார்கள். கோவிந்தனுக்கு 60 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்க முடிந்திருக்கிறது. மேல் சிகிச்சைக்காக அந்த மாணவனை வேலூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு தனிப்படைகளை அமைத்த திருப்பத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். முன்பகை காரணமாக மாணவன் கோவிந்தனைக் கொலை செய்த முயற்சித்திருக்கிறார்களா, இல்லை பள்ளி மாணவர்களுக்குள் ஏதேனும் பிரச்சனை இருந்ததா, அல்லது காதல் விவகாரத்தினால் இந்த சம்பவம் நடந்ததா என்று மூன்று கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இன்று காலை பத்து மணி முதல் கோவிந்தன் படித்த தனியார் பள்ளி நிர்வாகத்திடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon