மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ஒருதலைக் காதலால் பெண் எரித்துக் கொலை!

ஒருதலைக் காதலால் பெண் எரித்துக் கொலை!

ஒருதலைக் காதலால் சென்னையைச் சேர்ந்த இளம் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஒருதலைக் காதலால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்கதையாகி வருகின்றன. நுங்கம்பாக்கம் மென் பொறியாளர் சுவாதி கொலையைத் தொடர்ந்து பெண்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்துவதுஅதிகரித்துள்ளது. தூத்துக்குடி பிரான்சினா, மதுரை சோனாலி, கோவை தன்யா, காரைக்கால் வினோதினி, விழுப்புரம் நவீனா,பெருங்களத்தூர் சோனியா எனப் பல பெண்கள்காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆயுதங்களால் தாக்கப்பட்டும், தீக்கிரையாக்கப்பட்டும் உயிரிழந்துள்ளனர். தற்போது, சென்னையைச் சேர்ந்த இந்துஜா என்ற பெண் ஒருதலைக் காதலுக்குப் பலியாகியுள்ளார்.

சென்னை ஆதம்பாக்கம் ஏ.ஜி.எஸ். காலனியைச் சேர்ந்தவர் இந்துஜா. இவரை ஆகாஷ் என்ற இளைஞர் ஒரு மாதமாக ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். அவரது காதலை ஏற்க இந்துஜா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் நேற்று (நவம்பர் 13) இரவு இந்துஜா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் தாய் ரேணுகா, தங்கை நிவேதிதா ஆகியோர் இருந்துள்ளனர். தான் வைத்திருந்த பெட்ரோலை திடீரென அவர்கள் மீது ஊற்றி நெருப்பு வைத்துவிட்டு அந்த இடத்தில் இருந்து ஆகாஷ்தப்பி ஓடியுள்ளார்.

இதனால் மூவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்துஜா உயிரிழந்தார் மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தப்பி ஓடிய ஆகாஷை இன்று (நவம்பர் 14) காலை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒருதலைக் காதலால் ஒரு குடும்பத்தையே எரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon