மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

டிசம்பரில் உள்குத்து!

டிசம்பரில் உள்குத்து!

தினேஷ், நந்திதா மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்து வரும் உள்குத்து திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருடன் போலீஸ் படத்தை தொடர்ந்து அட்டகத்தி தினேஷ் – கார்த்திக் ராஜுவின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் உள்குத்து. பிகே பிலிம் பேக்டரி ஜி.விட்டல் குமாரின் தயாரிப்பில், வலுவான கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் அட்டகத்தியில் தினேஷ்க்கு ஜோடியாக நடித்த நந்திதா மீண்டும் அவருக்கு ஜோடியாகியுள்ளார். கடந்த மே மாதமே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் சில காரணங்களால் வெளிவராத நிலையில் தற்போது டிசம்பரில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் விட்டல் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்படத்தின் கதையையும், திரைக்கதையையும் மிக சிறப்பாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக்ராஜு. நல்ல கதைகளைத் தேடி தேர்வு செய்து நடிக்கும் தினேஷ் இப்படத்தில் அசத்தியுள்ளார். வணிக தரப்பிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. உள்குத்து படத்தை ரிலீஸ் செய்வதற்கு இதுவே சரியான நேரமாக நாங்கள் கருதுகிறோம். அதனால் தான் இப்படத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் சாயாசிங், ஜான் விஜய், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon