மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

புதிய அரிசி வகைகளை வழங்கிய மோடி

புதிய அரிசி வகைகளை வழங்கிய மோடி

சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் மரபணு வங்கிக்கு நவம்பர் 13ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு இந்திய அரிசி விதை வகைகளை வழங்கினார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாஸ் பானோஸ் நகரில் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகம் உள்ளது. இக்கழகத்திற்குச் சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அங்குப் பணிபுரியும் ஏராளமான இந்திய ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார். வெள்ளத்தைத் தாங்கும் சில அரிசி வகைகள் பற்றி பிரதமரிடம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கினர். அப்போது, அந்த அரிசி வகைகள் 14 முதல் 18 நாட்கள் வரை தண்ணீரில் மூழ்கித் தாக்குப்பிடிக்க முடியும் என்றும், ஒரு ஹெக்டேருக்கு கூடுதலாக 1 முதல் 3 டன் உற்பத்தி கிடைக்கும் என்றும் அவர்கள் பிரதமரிடம் கூறினர்.

அரிசி வகைகளின் கண்காட்சியையும், வேளாண்மையில் பெண்களின் பங்கு பற்றி சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகம் செய்திருந்த வேலைப்பாடுகளையும் கண்டுகளித்ததாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிக உற்பத்தியைத் தரும் அரிசி வகைகளை உருவாக்கச் சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் பிராந்திய மையத்தைப் பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைக்க இந்தியா தீர்மானித்துள்ளது. சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்துக்கு உலகளவில் 17 நாடுகளில் அலுவலகங்கள் உள்ளன. 1960ஆம் ஆண்டில் ஏற்பட்ட பசுமைப் புரட்சியின் போது அரிசி வகைகளை உருவாக்கிய சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகத்தின் பங்களிப்பு நினைவுகூரத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon