மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ஸ்மார்ட்போன் விலையைக் குறைத்த க்ஷியோமி!

ஸ்மார்ட்போன் விலையைக் குறைத்த க்ஷியோமி!

சீனாவைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான க்ஷியோமி, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் தனது ஸ்மார்ட்போன் ஒன்றின் விலையை 1000 ரூபாய் வரை குறைத்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் க்ஷியோமி நிறுவனம், இந்தியாவில் அதன் ரெட்மி நோட்-4 மாடலின் விலையை 1000 ரூபாய் வரை குறைத்துள்ளது. அதன்படி ரூ10,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 3GB RAM, 32 ஜி.பி. மெமரி கொண்ட ரெட்மி நோட்-4 மாடலின் புதிய விலை ரூ.9,999க்கும், ரூ.12,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட ரெட்மி நோட்-4 மாடலின் புதிய விலை ரூ.11,999க்கும் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து க்ஷியோமி இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மனு குமார் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில், "தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட்-4 ஸ்மார்ட்போனின் விலையில் 1000 ரூபாயை நிரந்தரமாகக் குறைத்துள்ளோம்" என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். இந்தச் சலுகை ஃபிளிப்கார்ட், Mi.com/in இணையத்தின் மூலம் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.11000 வரையில் எக்சேஞ் ஆஃபரும் வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான க்ஷியோமி, இந்தியாவில் ரெட்மி நோட்-4 ஸ்மார்ட்போனின் விற்பனையை இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. மேலும் க்ஷியோமியின் ரெட்மி நோட்-4, இந்த ஆண்டின் இரண்டு காலாண்டு வரையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகிய ஸ்மார்ட்போனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon