மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கருணாநிதியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு!

கருணாநிதியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு!

திமுக தலைவர் கருணாநிதியைத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்து நலம் விசாரித்தனர்.

உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் கடந்த ஒரு மாதமாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முரசொலி பவள விழா கண்காட்சியைப் பார்வையிட்ட அவர், தனது கொள்ளுப்பேரன் மனோரஞ்சித்தின் திருமணத்தையும் நடத்தி வைத்தார்.

முன்பு கருணாநிதி உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள புகைப்படங்கள் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது உடல்நிலை தேறியுள்ளதால் பல்வேறு தலைவர்களும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். கடந்த 6ஆம் தேதி கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்த பிரதமர் மோடி, ஓய்வெடுக்க டெல்லி வருமாறு கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் சந்திப்பில் அரசியல் எதுவுமில்லை என்று இரு கட்சிகளின் தலைவர்களும் விளக்கமளித்துள்ள நிலையில், இதுகுறித்து கேள்விக்குப் பதிலளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “இந்தச் சந்திப்பால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் ஏற்படவில்லை” என்றிருந்தார். இந்தச் சூழ்நிலையில் நேற்று (நவம்பர் 13) கோபாலபுரத்துக்கு வந்த திருநாவுக்கரசர், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “கடந்த முறை சந்தித்ததை விட திமுக தலைவர் கருணாநிதி இப்போது நன்றாக உடல்நலம் தேறியுள்ளார். என்னை அடையாளம் கண்டுகொண்டார். என் கையைப் பிடித்து பேச முயற்சி செய்தார். அவர் விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்.

அதிமுக இரண்டாக பிரிந்ததிலும், ஒன்றாக இணைந்ததிலும் பாஜக உள்ளது. தற்போது இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த அணிகளின் தரப்புக்குக் கொடுத்து, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறது” என்றார். மேலும், “வருமான வரி சோதனையை முன்பே நடத்தியிருந்தால் பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றியிருக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூடிய விரைவில் கருணாநிதி பூரண குணமடைவார். தற்போது நடைபெற்றுவரும் வருமான வரித்துறை சோதனை ஓர் ஆரம்பம்தான். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைச்சர்கள் பேசி வருகின்றனர்” என்றார்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon