மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

இரட்டையர்களின் இருண்ட காலம்!

இரட்டையர்களின் இருண்ட காலம்!

‘கனவு பலிக்காது, கானல் நீராகும்’ என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினை அதிமுக அமைச்சர்கள் கூறியதைக் கண்டித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் நேற்று (நவம்பர் 13) அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஸ்டாலின் கூறியது போல இரட்டையர்கள் (முதல்வர் மற்றும் துணை முதல்வர்) அரசு கஜானாவைத் தூர் வாருவதில் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படுகின்றனர். இவர்கள் அரசு விழாக்களில் மேடை நாகரிகம்கூட தெரியாமல் பேசி வருகின்றனர்.

சந்தனத்துடன் உரசிக்கொண்டால் அந்த வாசனை தங்களுக்கும் வரும் என்று கருதி ஸ்டாலினுடன் உரசிப் பார்க்க இரட்டையர்கள் கனவு காணுவது கதைக்கு உதவாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொதுப்பணித்துறைக்கு இந்த இரட்டையர்கள் பொறுப்பில் இருந்த காலம்தான் இருண்ட காலம். எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டத்தையும் இவர்களால் கொண்டுவர முடியவில்லை. நீர்நிலை மராமத்துப் பணிகளுக்காக இப்போது அறிவித்துள்ள ரூ.1,300 கோடியுடன் சேர்த்து ரூ.5,000 கோடி ஒதுக்கியாயிற்று. ஆனால், ஒரு மழைக்கே சென்னை தாங்கவில்லை. இதுகுறித்து ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டும் இதுவரை அளிக்கவில்லை.” இவ்வாறு கூறியுள்ளார்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon