மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கமல் தொடங்கிய புது வியாபாரம்!

கமல் தொடங்கிய புது வியாபாரம்!

கமல்ஹாசன் எந்தப்பக்கம் செல்லப்போகிறார் என்ற கேள்வி பல நாள்களாகத் தொடர்ந்து வந்தது. இது அரசியலுக்கான கேள்வியாக இருந்த காலம் முடிந்து, இப்போது சினிமாவுக்கான கேள்வியாக மாறிவிட்டது.

விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு ஆகிய இரண்டு படங்களின் வேலைகள் முடிவடையாமல் இருக்க, புதிதாக இந்தியன் 2 திரைப்படத்துக்கு ஷங்கருடன் இணைவதாக அறிவித்தார். இந்த மூன்று படங்களில் எந்தப்பக்கம் கமல் திரும்பப்போகிறார் என்ற கேள்விக்கு விடை இப்போது கிடைத்திருக்கிறது. இம்மாத (நவம்பர்) இறுதியில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு தொடங்குவதாகத் தெரிகிறது.

சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் 2 ஆகிய திரைப்படங்கள் கமலிடம் பட்ஜெட் இல்லாமல் நிற்கின்றன. இந்தியன் 2 படத்தை லைகா தயாரிப்பதால் அதில் பணப்பிரச்னை இல்லை. ஷங்கர் எந்திரன் 2 வேலைகளை முடித்து ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கிய பிறகுதான் அது ஷூட்டிங்குக்குத் தயாராகும் என்பதால் கமலின் கவனம் மற்ற இரண்டு படங்களின் மீது தான்.

சபாஷ் நாயுடு படத்தை எப்போது தொடங்குவதற்கும் லைகா நிறுவனம் தயாராக இருந்தாலும், சொந்தப்படமான விஸ்வரூபம் 2 முதலில் முடிக்கப்பட வேண்டும் என்பதே கமலின் எண்ணமாக இருந்து இப்போது ஷூட்டிங் தொடங்கப்படவிருக்கிறது. விஸ்வரூபம் 2 டீசரை வெளியிடுவதாக முதலில் அறிவித்தார். அதற்கு உருவான எதிர்பார்ப்பு நல்ல எதிர்காலத்தைக் காட்டவே இப்போது ஷூட்டிங்கைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வட இந்தியாவின் பக்கம் அதிகம் முகம் காட்டியிருப்பது விஸ்வரூபம் 2 டீசர் வெளியாகும்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பாகுபலி திரைப்படம் தென்னிந்திய திரைப்படங்களுக்குத் திறந்துவிட்டிருக்கும் மிகப்பெரிய வெளியில் முதலில் பயன்பெறப் போவது விஸ்வரூபம் 2 திரைப்படம்தான்.

விஸ்வரூபம் 2 டீசர் வெற்றிபெற்றால் தென்னிந்திய சினிமாவில் முதலீடு செய்யவும், இந்திய சினிமாக்களை இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ரிலீஸ் செய்து பயன்பெறவும் காத்திருக்கும் நிறுவனங்கள் கமல்ஹாசனை நோக்கிப் படையெடுக்கும். இந்த துருப்புச்சீட்டின் மூலமே விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு திரைப்படத்தை முடிக்குமளவுக்கு ராஜ்கமல் நிறுவனத்தின் பேங்க் பேலன்ஸ் உயர்ந்துவிடும்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon