மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

தொடாமலே காயப்படுத்திய டி.ஆர்.

தொடாமலே காயப்படுத்திய டி.ஆர்.

‘விழித்திரு’ படப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது டி.ராஜேந்தர், நடிகை தன்ஷிகாவைக் காயப்படுத்திப் பேசியது தொடர்பாக மௌனத்தைக் கலைத்துள்ளார் தன்ஷிகா.

தன்னுடைய படங்களிலும் சரி. தான் எடுத்துக்கொண்ட கதாபாத்திரங்களிலும் சரி... பெண்களைத் தொடாமலே நாயக பாத்திரம் அமையுமாறு பெரும்பாலான திரைப்படங்களை இயக்கியும், தானும் அவ்வாறே நடித்தும் வந்தவர் டி.ராஜேந்தர். அப்படிப்பட்ட டி.ஆர். ‘விழித்திரு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது மேடையிலேயே தன்ஷிகாவைக் கடுமையாகச் சாடியது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. தன்ஷிகா மன்னிப்பு கோரியும்கூட விடாமல் திட்டித் தீர்த்தார். இந்தச் சம்பவத்தால் தன்ஷிகா மேடையிலேயே கண் கலங்கினார். இதன் காரணமாக டி.ஆர். மீது இணையத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், பாதிக்கப்பட்ட தன்ஷிகாவோ எதுவுமே கூறவில்லை. இது குறித்த ஊடக கேள்விகளையும் அவர் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் ‘விழித்திரு’ படம் பற்றிய திறனாய்வு கூட்டம் மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 11) மாலையில் நடைபெற்றது. இந்த திறனாய்வுக் கூட்டத்தில் பேசிய தன்ஷிகா, “டி.ஆர். சர்ச்சை குறித்து தன்ஷிகா ஏன் பேச மறுக்கிறார் எனப் பல ஊடகங்களும் என்னை நோக்கி கேள்வி எழுப்பின. அந்தச் சம்பவத்தில் இருந்து வெளியில் வரவே எனக்கு இரண்டு மூன்று வாரங்கள் ஆகின. டி.ஆர். சார், நான் ஓர் ஆன்மிகவாதி எனக் கூறினார். ஆனால், எந்த ஒரு ஆன்மிகவாதியும் அப்படி குரலை உயர்த்திப் பேச மாட்டார்கள். எனக்கு அதிகமாகக் கோபம் வரும். அதனைக் கட்டுப்படுத்த நான் தியானம் செய்கிறேன். அதனால்தான் இப்போது அமைதியாக இருக்கிறேன். எப்போது நான் ஆன்மிக பாதையில் செல்லத் தொடங்கினேனோ, அப்போது முதல் சாந்தமாகிவிட்டேன். அதன் காரணமாகவே அன்று அந்த சம்பவத்தின்போது நான் அமைதியாக இருந்தேன்” என்று தெரிவித்தார் .

அந்தச் சம்பவம் தன்ஷிகாவை மனதளவில் பாதித்தோடு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் உண்மை. அது குறித்து பேசிய தன்ஷிகா, “அந்தச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. பெண்கள் இந்தச் சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்களைச் சந்திக்க நேர்கிறது. அதற்காக ஒட்டுமொத்த ஆண்களையும் நான் குறை கூறவில்லை. மீரா கதிரவன் போன்ற இயக்குநர்களால்தான் நான் இன்று சினிமாத்துறையில் நடிகையாக இருக்கிறேன். டி.ஆர். பிரச்னையை இத்துடன் முடிக்க விரும்புகிறேன்” என்று தனது நெடுநாளான மௌனத்தைக் கலைத்துள்ளார் தன்ஷிகா.

பெண்களைத் தொடாமலே பேசி நடித்து வந்த டி.ஆர், அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன்ஷிகாவை சாடியது எந்தளவுக்கு அவரைப் பாதித்துள்ளது என்பது தன்ஷிகாவின் பேச்சில் அறிய முடிகிறது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon