மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

இந்தியாவில் அதிகமான பன்றிக் காய்ச்சல் பாதிப்பு!

இந்தியாவில் அதிகமான பன்றிக் காய்ச்சல் பாதிப்பு!

இந்தியாவில் தற்போது பன்றிக் காய்ச்சல், டெங்குக் காய்ச்சல் போன்று பல வைரஸ் காய்ச்சல்கள் வருகின்றன. இதனால் பொதுமக்கள் பலர் இறந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இவற்றில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் புள்ளிவிவர அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு அக்டோபர் வரை பன்றிக் காய்ச்சலால் இந்தியாவில் 8,543 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு 20 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் 1.14 லட்சம் பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 23,812 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 716 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 18,206 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. 431 பேர் பலியாகி உள்ளனர். ராஜஸ்தானில் 13,158 பேருக்குப் பன்றிக் காய்ச்சல் பாதிப்பும், 235 பேர் இதனால் பலியாகியும் உள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படாத பகுதிகளாக சிக்கிம் மற்றும் லட்சத்தீவே உள்ளன. 2017இல் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத பகுதிகளாக மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், லட்சத்தீவு மட்டுமே உள்ளன.

இதுகுறித்து டாக்டர் வித்யா கூறுவது, “இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் அதிகமாக பன்றிக் காய்ச்சல் நோய் வருகிறது. இதற்கு அங்குள்ள சுற்றுப்புறமும் ஒரு காரணமாக இருக்கலாம். காலநிலைகளுக்கு ஏற்றவாறு நோய்கள் அதிகரிக்கிறது. தமிழ்நாட்டில் தற்போது கனமழையால் டெங்குக் காய்ச்சல் பரவி வருவது போன்று வடமாநிலங்களில் பன்றிக் காய்ச்சல் பரவலாம்” என்று கூறுகிறார்.

பன்றிக் காய்ச்சல், இன்புளூயன்சா எனும் வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. பன்றிக் காய்ச்சல் பாதிப்பது ஏற்படாமல் இருக்க அறிகுறிகள் தென்பட்டவுடன், முறையான சிகிச்சை பெற வேண்டும். டாக்டர்கள் ஆலோசனையின்றி தாமாக மருந்துகள் உட்கொள்ளக் கூடாது. நோய் இருப்பின் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். இருமல், தும்மல் ஏற்படும்போது வாய், மூக்கை, கைக்குட்டையால் மூடுவது அவசியம். கைகளை கழுவாமல், மூக்கு, வாய், கண்களை தொடக் கூடாது. கைக்குலுக்குதல், தழுவுதலைத் தவிர்க்கவும். பஸ், ரயில், மாடிப்படி, எஸ்கலேட்டர், கைப்பிடிகள், கதவு கைப்பிடிகள், பொது இடங்களில் உள்ள இருக்கைகள் ஆகியவற்றை, கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon