மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

லாலுவைக் கலாய்த்த நிதிஷ்

லாலுவைக் கலாய்த்த நிதிஷ்

’ராஷ்ட்ரிய ஜனதாதளம் என்பது தனியாருக்குச் சொந்தமான அரசியல் கட்சி’ என்று லாலு பிரசாத் யாதவைக் கலாய்த்திருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடன் இணைந்து ‘மஹாகத்பந்தன்’ என்ற கூட்டணியை அமைத்து வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து, லாலுவின் இளையமகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் நிதிஷ் முதல்வராகவும் பதவியேற்றனர்.

கடந்த ஜூலை மாதம் இந்தக் கூட்டணி உடைந்தது. இதைத் தொடர்ந்து, பாஜக துணையுடன் ஆட்சியைப் பிடித்தார் நிதிஷ். இதனால் கடந்த ஐந்து மாதங்களாக, நிதிஷின் ஒவ்வோர் அசைவையும் விமர்சனம் செய்து வருகின்றனர் லாலுவின் சகாக்கள். இதற்குப் பதிலடி தந்து வருகிறது நிதிஷ் தரப்பு.

தற்போது ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் தலைவர் பதவிக்காகத் தொடர்ந்து பத்தாவது முறையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் லாலு.

இதுபற்றி நிதிஷ்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “அது ஒரு வழக்கமான அரசியல் அமைப்பல்ல; தனியாருக்குச் சொந்தமான அரசியல் கட்சி. அது ஒரு குடும்பச் சொத்து” என்று கலாய்த்திருக்கிறார் நிதிஷ்.

தொடர்ந்து, “அது ஒரு கட்சியின் உள்கட்சி பிரச்னை. ஆனாலும், அந்தக் கட்சியில் ஒவ்வோர் ஆண்டும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை. கடந்த ஆண்டுதான், அந்தக் கட்சியின் தேசியத் தலைவரையே தேர்ந்தெடுத்தார்கள். இந்த அறிவிப்பு எல்லாம், தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கான ஒரு யுக்திதான். எனது மாணவப் பருவத்திலிருந்து, லாலுவை நான் பார்த்துவருகிறேன்” என்றிருக்கிறார்.

கடந்த சில நாள்களாக, நிதிஷ் மற்றும் அவரது அமைச்சரவையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் லாலுவின் கட்சியினர். குறிப்பாக, தேஜஸ்வி யாதவ் கடுமையாக நிதிஷை விமர்சிக்கிறாராம். “அவதூறுகளை அள்ளிவீசுவது அவர்களது கலாசாரம். அதனால், எனக்கெதிரான தனிப்பட்ட தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டாம் என்று எங்களது செய்தித் தொடர்பாளரிடம் சொல்லியிருக்கிறேன். தேஜஸ்வி ஒரு குழந்தை. ஆனாலும் தந்தையின் வழி மரபுரிமையாக அந்தக்குணம் அவரிடமும் வந்துவிட்டது” என்று சீண்டியிருக்கிறார்.

இதற்குப் பதில் சொல்லாமல் லாலு கடந்து போகமாட்டார் என்பது உறுதி. அந்தப் பதிலடி என்ன தரத்தில் இருக்குமென்று யாருக்கும் தெரியாது என்பது மறுக்க முடியாத உண்மை.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon