மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்

கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நாயகி மெஹ்ரீன் நடித்த காட்சிகளை நீக்கியிருப்பதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகியுள்ள நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் எடிட்டட் வெர்ஷன் நேற்று (நவம்பர் 12) மதியம் முதல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியானது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) அன்று வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகள் ரசிகர்களுக்குத் தொய்வை ஏற்படுத்துகின்றன என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு படக் குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது.

இது குறித்து இயக்குநர் சுசீந்திரன், “நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன. படத்தில் இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படத்தின் புதிய வெர்ஷன் இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டுள்ளது. நாங்கள் 15 நாள்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளைச் சூழ்நிலை காரணமாக நீக்கியுள்ளோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சந்தீப் கிஷான், விக்ராந்த், மெஹ்ரீன், ஹரிஷ் உத்தமன், துளசி, ஷாதிகா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon