மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

கடல் நீரில் அரிசி விளைச்சல்!

கடல் நீரில் அரிசி விளைச்சல்!

சீனாவில் 20 கோடி மக்களின் பசியைப் போக்கும் அளவுக்குக் கடல் நீரில் அரிசியை விளைய வைத்து சீன விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

சீனாவில் கடல் நீரில் விவசாயம் செய்ய கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகளின் துணையுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் ஆராய்ச்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் மஞ்சள் கடல் அருகே அமைந்துள்ள குயிங்டாவ் பகுதியில் கடல் நீரின் துணையுடன் சுமார் 200 வித்தியாசமான தானியங்களை ஆராய்ச்சியாளர்கள் பயிரிட்டனர். அதில், அரிசி வகைகளும் அடங்கும். இதில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 4.5 டன் அரிசி விளையும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 9.3 டன் அரிசி விளைந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இதில் பத்துக்கும் மேற்பட்ட பகுதியில் அரிசிகளைப் பயிரிடும் பட்சத்தில் 20 கோடி மக்களுக்குத் தேவையான 50 மில்லியன் டன் அரிசியை விளைவிக்க முடியும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, இதன் மூலம் சீனாவின் அரிசி உற்பத்தியை 20 சதவிகிதம் வரை அதிகரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சீனாவில், 90 சதவிகிதம் உப்பு மற்றும் அல்கலைனால் கலந்த மண் மட்டுமே அதிக அளவில் காணப்படுகிறது. தற்போது இந்த மண்ணில் கடல் நீரின் மூலம் அரிசி விளைவித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon