மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

நிலக்கரிச் செலவைக் குறைத்த ரயில்வே!

நிலக்கரிச் செலவைக் குறைத்த ரயில்வே!

ரயில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் கூடுதல் தண்டவாளங்கள் அமைக்கும் பணியை முடித்துள்ள ரயில்வே துறை, இதன்மூலம் நிலக்கரியை எடுத்துச்செல்லும் சரக்குப் போக்குவரத்துக்கான செலவை 25 சதவிகிதம் வரையில் குறைத்துள்ளது.

ஒடிசாவின் நிலக்கரி நகரம் என்றழைக்கப்படும் தால்செர் பகுதியிலிருந்து தென்னிந்தியாவின் தமிழகம், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள மின் உற்பத்தி ஆலைகளுக்குத் தேவையான நிலக்கரியானது கடற்கரை வழி ரயில்பாதை வழியாகவே எடுத்து வரப்படுகிறது. இதனால், போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக இருப்பதோடு, அதிக காலதாமதமும் ஏற்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் கடற்கரை வழி ரயில்பாதை வழியாக 50 சதவிகித நிலக்கரியையும், பிற ரயில் பாதைகள் வழியாக மீதத்தையும் எடுத்துவர ரயில்வே துறை அனுமதியளித்திருந்தது. மேலும், சரக்குப் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் குறைந்த அளவிலான நிலக்கரியைப் பகுதி பகுதியாக அனுப்புமாறும் வாடிக்கையாளர்களை ரயில்வே துறை வலியுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், ரயில்வே தண்டவாளங்களை அதிகரித்தல் மற்றும் பலப்படுத்துதல் பணியில் இறங்கிய ரயில்வே துறை நிறைவுக்கட்டத்தில் உள்ளது. இதனால் இந்த வழியாகவே இனி நிலக்கரியை எடுத்துவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நிலக்கரி போக்குவரத்துக் கட்டணம் 25 சதவிகிதம் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ரயில்வே சரக்குகள் பிரிவின் உறுப்பினரான முகமது ஜாம்ஜெட் கூறுகிறார். நிலக்கரி போக்குவரத்துக் கட்டணம் குறைவதால் மின் உற்பத்திக் கட்டணமும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon