மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

ரகுராம் ராஜனின் கோரிக்கை நிராகரிப்பு!

ரகுராம் ராஜனின் கோரிக்கை நிராகரிப்பு!

‘இஸ்லாமியர்களுக்கு வட்டியில்லா வங்கிச் சேவையை வழங்க வேண்டும்’ என்ற ரகுராம் ராஜனின் கோரிக்கைக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவளிக்க மறுத்துள்ளது.

அனைத்துக் குடிமக்களுக்கும் வங்கிக் கணக்கு என்பது பொதுவானது. ஆனால், இஸ்லாமிய வங்கியானது அவர்களது மத வழக்கத்தின்படி வட்டியில்லாமல் தொடங்கப்பட முடிவு செய்யப்பட்டதாகும். இஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்வது குறித்து ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் நீண்ட காலமாக விவாதித்து வந்த நிலையில், இந்தியாவில் வங்கிப் பயன்பாடு அனைவருக்கும் பொதுவானது, இதை இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனியே வழங்க முடியாது என பிடிஐ நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சகத்துக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்த வட்டியில்லா வங்கிச் சேவையைத் தொடங்குவதில் பல சிக்கல்கள் மற்றும் சவால்கள் உள்ளன. மேலும், இந்திய வங்கிகளுக்கு இதில் முன் அனுபவம் இல்லை. எனவே, இதைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்படும். முதலில் வழக்கமான வங்கிகள் போல தொடங்கப்பட்டுப் பின்னர் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று இஸ்லாமிய வங்கிகளாக மாற்றப்படும்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக 2008ஆம் ஆண்டு முதல் நிதித்துறையில் வட்டியில்லா வங்கிச் சேவையைக் கொண்டுவர வேண்டும் என்று (ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான) ரகுராம் ராஜன் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் நீண்டகாலமாக அழுத்தம் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon