மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 14 நவ 2017

அமைதி காக்கும் ஆப்பிள் நிறுவனம்!

அமைதி காக்கும் ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் நிறுவனம் மொபைல் விற்பனையில் தற்போது முதலிடத்தில் இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயனர்களும் இதன் மாடலை வாங்க விருப்பப்படுகின்றனர். சமீபத்தில் வெளியான ஐ-போன் எக்ஸ் விற்பனையில் மாபெரும் சாதனை படைத்தது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் இதுவரை சந்திக்காத அளவுக்கு இந்த மாடலினால் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது.

இந்த மாடல் வெளியானது முதல் பல்வேறு சாப்ட்வேர் பிரச்னைகள் இருப்பதாக பயனர்கள் முதலில் தெரிவித்தனர். அதைச் சரிசெய்ய புதிய அப்டேட் ஒன்றினை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம். அதன்பின்னர் ஐ-போன் எக்ஸ் மாடலின் தொடுதிரை குளிர் பிரதேசங்களில் சரியே செயல்படுவதில்லை என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தனர். இதை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டு அதற்கான தீர்வினை வழங்குவதாக உறுதி அளித்தது. அதற்குள் திரையில் பச்சை நிற கோடு தோன்றுகிறது என்ற புதிய சிக்கலை பல பயனர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பதில் கூறுவதற்கு முன்பாகவே மீண்டும் மற்றொரு சிக்கல் எழுந்துள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு.

ஐ-போன் எக்ஸ் மாடலில் உள்ள பேஸ் அனலாக் முறையை ரூ.9,000 மதிப்புள்ள ஒரு போலி முகமுடியைக் கொண்டு ஒருவர் அனலாக் செய்தது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ஒரே மாதிரியான இரட்டையர்கள் பேஸ் அனலாக் முறையை எளிதாக செயலிழக்க செய்து உள் நுழைந்துள்ளனர். அதாவது ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்களில் ஒருவர் முகத்தை பயன்படுத்தி லாக் செய்த மொபைலை மற்றொருவர் அனலாக் செய்ததும் பாதுகாப்பு குறைபாட்டினைக் காட்டுகிறது. இதற்கு ஆப்பிள் நிறுவனம் இன்னும் பதில் கூறவில்லை. பாதுகாப்பு மிகுந்த மொபைல்களை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல்கள் குறித்து கடும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

செவ்வாய், 14 நவ 2017

chevronLeft iconமுந்தையது