மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 13 நவ 2017

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?

கருணாநிதி, மோடி சந்திப்பால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் எதுவும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தினந்தந்தி பவள விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த 6ஆம் தேதி சென்னை வந்த பிரதமர் மோடி, கோபாலபுரத்திலுள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில், அவரைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். டெல்லியில் வந்து தங்கி ஓய்வெடுக்குமாறு நெகிழ்ச்சியுடன் கூறிச் சென்றார். இந்தச் சந்திப்பில் எவ்வித அரசியலும் இல்லை என்றும், மூத்த அரசியல் தலைவரின் உடல்நிலை குறித்து நலம் விசாரிப்பதற்காகவே பிரதமர் வந்தார் என்றும், திமுக, பாஜக தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில் சந்திப்பு குறித்து நேற்று (நவம்பர் 12) கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “திமுக தலைவர் கருணாநிதியைப் பிரதமர் மோடி சந்தித்ததால் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், “சசிகலா குடும்பத்தினர் மீது குறிவைத்து நடத்தப்படும் வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய பாஜக அரசே காரணமாகும்” என்ற அவர், “ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலா குடும்பத்தினரின் இல்லத்தில் சோதனை நடத்தாதது ஏன்?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.

தொடர்ந்து, “தமிழகத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் என்ன ஆனது என்ற தகவலை மக்களுக்குத் தெரிவிக்கவில்லை. வருமான வரித்துறைக்கு இதுபோன்ற சோதனைகள் வாடிக்கையாகிவிட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.

திங்கள், 13 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon