மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 7 நவ 2017

பங்கனபள்ளி மாம்பழத்திற்கு புவியியல் குறியீடு!

பங்கனபள்ளி மாம்பழத்திற்கு புவியியல் குறியீடு!

ஆந்திரப் பிரதேசத்தின் பங்கனபள்ளி மாம்பழம், துலபன்ஜி அரிசி மற்றும் ஆறு பொருட்களுக்கு இந்த நிதியாண்டில் புவியியல் குறியீடு அளிக்கப்படும் என்று இந்திய காப்புரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேளாண்துறை சார் பொருட்கள், இயற்கை மற்றும் உற்பத்திப் பொருட்கள் (கைவினை பொருட்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள்) ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பிரத்தியேகமாக உற்பத்தி செய்யப்படுமானால் அதற்கு புவியியல் குறியீடு வழங்கப்படுகிறது. இந்தப் புவியியல் குறியீட்டைப் பெறத் தரம் மற்றும் தனித்துவம் மிக முக்கியமானது. உதாரணமாக டார்ஜலிங் தேயிலை, திருப்பதி லட்டு, நாக்பூர் ஆரஞ்சு போன்றவற்றிற்கு புவியியல் குறியீடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிதாக புவியியல் குறியீடு பெற ஆந்திரப் பிரதேசத்தின் பங்கனபள்ளி மாம்பழம், மேற்குவங்கத்தின் துலபன்ஜி அரிசி, தெலங்கானாவின் போச்சம்பள்ளி ஐகாட், மேற்குவங்கத்தின் கோவிந்தோபோக் அரிசி, ஆந்திரப் பிரதேசத்தின் துர்கி கல் சிற்பங்கள் மற்றும் எத்திகோபக்கா பொம்மைகள், நாகாலாந்தின் சாக்சேசங் சால்வைகள் போன்றவற்றிற்கு இந்த நிதியாண்டில் புவியியல் குறியீடு வழங்கப்படும் என்று இந்திய காப்புரிமை அலுவலகம் தனது இணையதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஒரு பொருளுக்கு ஒருமுறை புவியியல் குறியீடு வழங்கப்பட்டால், அதன்பிறகு அந்தப் பெயரை யாரும் சந்தையில் போலியாகப் பயன்படுத்த இயலாது. இது நுகர்வோருக்கு ஒரு நம்பகத் தன்மையை அளிக்கும். 2016-17ஆம் நிதியாண்டில் 33 பொருட்களுக்கு இந்திய காப்புரிமை அலுவலகத்தால் புவியியல் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 7 நவ 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon